தமிழ்நாட்டில் சாகுபடி (samba season) செய்யப்படும் உணவுப் பயிர்களில் முக்கியமானது நெற்பயிர். இங்கே, சுமார் 18 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இது, நம் மாநிலத்தின் மொத்த சாகுபடி பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். இந்தப் பரப்பில் 15.7 சதவீதம் குறுவைப் பருவத்திலும், 74.7 சதவீதம் சம்பா பருவத்திலும், 9.6 சதவீதம் நவரைப் பருவத்திலும் பயிரிடப்படும்.
Samba season | டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பருவம்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி முக்கியமானது. இந்த இருபருவ சாகுபடிகளும், ஆகஸ்ட், செப்டம்பரில் தொடங்கி, ஜனவரி பிப்ரவரியில் முடிவடையும். இவ்வகையில், 12-13.5 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,07,435 எக்டரில் நெல் சாகுபடி நடைபெறும். இதில், 38,441 எக்டர் பரப்பில் குறுவைப் பருவத்திலும், 68,988 எக்டர் பரப்பில் சம்பா மற்றும் தாளடிப் பருவத்திலும், 100 எக்டர் பரப்பில் கோடைப் பருவத்திலும் பயிரிடப்படும்.
சம்பா பருவம்: Samba season இதன் சாகுபடிக் காலம் 130-150 நாட்களாகும். மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதை வைத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாற்றங்கால் பணியும், அதைத் தொடர்ந்து நடவுப் பணியும் மேற்கொள்ளப்படும்.
தாளடிப் பருவம்: குறுவை நெல் அறுவடை முடிந்த நிலங்களில் அல்லது குறுகிய கால நெற்பயிர்கள் அறுவடைக்குப் பின்பு, அதாவது, அக்டோபர் நவம்பரில், தாளடி சாகுபடி நடைபெறும்.
சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில், 145-160 நாட்களைக் கொண்ட நீண்டகால மற்றும் 120-145 நாட்களைக் கொண்ட மத்திய கால வயதுள்ள இரகங்கள்; பயிரிடும் சூழல் மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப பயிரிடப்படும்.
பிரபல இரகங்களான சி.ஆர்.1009, சி.ஆர்.1009 சப் ஒன். ஆடுதுறை 51 போன்ற நீண்ட கால இரகங்களும்; ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 54. கோ.43, கோ.50. கோ.52. மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, பி.பி.டி. 5204, சுவர்ணா சப் ஒன், எம்.டி.யு. 7029, ஆர்.என்.ஆர். 15048 போன்ற மத்திய கால இரகங்களும்; என்.எல்.ஆர். 34449, அக்சயா, அம்மன், டி.கே.எம். 13 போன்ற குறைந்த மத்தியகால இரகங்களும் பெருமளவில் பயிரிடப்படும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவினானே என்னும் காலக்கூற்றின்படி, மயிலாடுதுறை மற்றும் ஏனைய டெல்டா மாவட்ட விவசாயிகள், தங்கள் பகுதிக்கு என, வெளியிடப்பட்டுள்ள புதிய இரகங்களையும், அவற்றின் குணங்கள் மற்றும் சாகுபடி முறைகளையும் தெரிந்து கொண்டு, அந்த இரகங்களைப் பயிரிடலாம்.
ஆடுதுறை 60 (ADT 60)
இது, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால், தாளடி மற்றும் பின்சம்பா சாகுபடிக்காக உருவாக்கப்பட்ட உயர் விளைச்சலைத் தரும் மத்திய கால இரகமாகும். இது, AD 01246 மற்றும் கோ.9 நெல் இரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு இரகமாகும். இதன் வயது 130-135 நாட்களாகும். நடுத்தரச் சன்ன இரகம் இது, 120 செ.மீ. உயரம் வளரும். பயிர்கள் சாய்வதில்லை. முழுமையாக வெளிவரும் கதிர்கள், அதிகளவில் வளர்ந்த நாற்றுகள், சீராகப் பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சி, மணிகள் உதிராத தன்மை மிக்கது.
ஆயிரம் நெல் மணிகளின் எடை 18.5 கிராம். இது, 68 சதவீத அரவைத் திறன் கொண்டது. இந்த இரகம், புகையான், தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு ஆகிய பூச்சிகள் மற்றும் பாக்டீரிய இலைக்கருகல் நோய், குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. எக்டருக்கு 6,280 கிலோ மகசூலைத் தரக்கூடியது, இது, ஏ.டி.டீ.46 இரகத்தை விட 13.2 சதவீதம் அதிகமாகும்.
ஆடுதுறை 59 (ADT 59)
இந்த இரகம், கார், குறுவை, சொர்ணவாரி, கோடைக்கு ஏற்றதாக, ஆடுதுறை 59 இரகம் ஐ.ஈ.டீ 22075 மற்றும் ஆடுதுறை 48 இரகத்தை இணைத்து, 2024-இல் உருவாக்கப்பட்டது. உருண்டை அரிசியைக் கொண்ட இது, எக்டருக்கு 6,100 கிலோ விளைச்சலைத் தரவல்லது. மேலும், 75 சதவீத அரவைத் திறனையும், 66 சதவீத முழு அரிசி காணும் திறனையும் கொண்டது.
இதன் சாகுபடிக்குக் குறைந்த இடுபொருள்களே தேவைப்படும். வளம் குறைந்த நிலத்திலும் பயிரிடலாம். முழுமையாக வெளிவரும் இதன் கதிர்கள் வெண் மஞ்சள் நிற மணிகளையும், மிகக் குறைந்த பதர்களையும் கொண்டிருப்பது இதன் சிறப்புகளாகும். பாக்டீரிய இலையுறைக் கருகல், குலைநோய் மற்றும் துங்ரோ வைரஸ் நோய்க்கு எதிர்ப்புத் திறன் உடையது.
குருத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு, பாக்டீரிய இலைக்கருகல், இலையுறை அழுகல் மற்றும் மஞ்சள் கரிப்பூட்டை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. இட்டிலி மற்றும் பலகாரங்கள் செய்ய ஏற்ற இந்த இரகத்தில் 19.4 பி.பி.எம். துத்தநாகச் சத்து உள்ளது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 22.4 கிராம் இருக்கும்.
ஆடுதுறை 58 (ADT 58)
இந்த இரகம், ஏ.டீ.டி.39 மற்றும் கோனார்க் இரகங்களை இணைத்து, 2023-இல் வெளியிடப்பட்டது. இது, தாளடி மற்றும் பின்தாளடிப் பருவத்தில் பயிரிட ஏற்ற வகையில், 125-130 நாட்களில் விளையும் மத்திய கால இரகமாகும். எக்டருக்கு 6,100 கிலோ விளைச்சலைத் தரவல்லது. அதிகத் தூர்கள் மற்றும் அதிகக் கதிர்களைத் தரவல்லது. அடர்த்தியான அடித்தூர் மற்றும் சாயாத உறுதியான தண்டைக் கொண்டது.
அரிசி நடுத்தரச் சன்னமாக இருக்கும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் ஆகும். இது, 72.65 சதவீத அரவைத் திறனும் மற்றும் முழு அரிசி காணும் திறனும் கொண்டது. குலை நோய், செம்புள்ளி, இலையுறை அழுகல், இலை மடக்குப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் ஆகிய நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல்களை மிதமாக எதிர்க்கும் திறனுள்ளது. இது, ஏ.டி.டீ.39 இரகத்துக்குச் சிறந்த மாற்று இரகமாகும்.
ஆடுதுறை 52 (ADT 52)
இந்த இரகம், சி.ஆர்.1009 மற்றும் ஏ.டி.டீ.49 இரகத்தை இணைத்து உருவாக்கப்பட்டது. நடுத்தர உயரம் உடையது. நடுத்தரத் தூர்க்கட்டும் திறனும் சாயாத தன்மையும் கொண்டது. எக்டருக்கு 6,002 கிலோ விளைச்சலைத் தரவல்லது. அனைத்திந்திய ஆய்வுகளின்படி, மத்திய மண்டலத்தில் பி.பி.டி.5204 இரகத்தை விட 27.6 சதவீதம் அதிக விளைச்சலைத் தரவல்லது.
இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, குலைநோய், குருத்தழுகல், நெல் நிறமாற்றம் ஆகியவற்றை நடுத்தரமாகத் தாங்கும் திறன் மிக்கது. அரிசி, மத்திய சன்னமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.9 கிராம் ஆகும். 67.7 சதவீத அரவைத் திறன், 61.1 சதவீதம் முழு அரிசி காணும் திறன் மற்றும் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.
ஆடுதுறை 51 (ADT 51)
இந்த இரகம், பி.பி.டி. 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி இரகத்தை இணைத்து உருவாக்கப்பட்டது. குறைந்த உரச்செலவில் விரைவாக வளரும். எக்டருக்கு 6,595 கிலோ விளைச்சலைத் தரவல்லது. அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், திருவிசை நல்லூரில் 10,035 கிலோ விளைச்சலைத் தந்தது.
குலைநோய், இலைச்சுருட்டுப் புழு மற்றும் குருத்துப் பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும். புகையான், இலையுறை அழுகல் மற்றும் இலையுறைக் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. அரிசி, மத்திய சன்ன வடிவில் இருக்கும். இதன் ஆயிரம் நெல் மணிகளின் எடை 23.9 கிராம் ஆகும். இது, சி.ஆர். 1009 இரகத்துக்கு இணையானது.
அரவைத் திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் முறையே 70.3 சதவீதம் மற்றும் 60.5 சதவீதமாகும். சமையல் பண்புகள் மற்றும் உணவின் சுவை சி.ஆர்.1009 இரகத்துக்கு இணையாக இருக்கும். மேலும், இதன் சோறு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும், மிருதுவாகவும் இருக்கும். சிற்றுண்டி வகைகள் மற்றும் இனிப்பு, கார வகைகளைச் செய்யவும் ஏற்றது.
கோ.59
இந்த இரகம், மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, அப்போ ஆகியவற்றின் கலப்பில் உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 5,867 கிலோ விளைச்சலைத் தரவல்லது. உத்ரகாண்ட் மாநிலம், பந்த் நகர் மற்றும் தருமபுரியில் அதிகளவு விளைச்சலாக 8,676 கிலோவைத் தந்தது. நடுத்தரக் குட்டை மற்றும் வறட்சியைத் தாங்கும் பண்புகளை உடையது.
வெண்முதுகுத் தத்துப்பூச்சி. இலைச்சுருட்டுப் புழு மற்றும் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 14.0 கிராம் ஆகும். இது, 65.5 சதவீத அரவைத் திறன், 60-70 சதவீத முழு அரிசி காணும் திறன் மற்றும் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.
கோ.58 (CO 58)
இந்த இரகம், வறட்சியைத் தாங்கும் கோ.58 இரகம், மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, அப்போ ஆகியவற்றின் கலப்பில், 2024-இல் உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்தில், அதாவது, 118-124 நாட்களில் விளையும். இதன் அரிசி நீண்ட சன்ன வடிவில் இருக்கும். பின்சம்பா, தாளடி, பிசானம் போன்ற பருவங்களில் நடவு முறையில் அல்லது நேரடி விதைப்பு முறையில் பயிரிட ஏற்றது. எக்டருக்கு 5,858 கிலோ விளைச்சலைத் தரும்.
இலையுறைக் கருகலுக்கு எதிர்ப்புத் திறனும், வெள்ளை மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், துங்ரோ வைரஸ் மற்றும் பழுப்புப் புள்ளி நோய்களுக்கு, மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 19.4 கிராம் ஆகும்.
இந்த இரகம் 62 சதவீத அரவைத் திறன், முழு அரிசி காணும் திறன், வாசனை, மென்மை, இடைப்பட்ட அமைலோசுடன், நன்கு நீளும் தன்மையுடன் உள்ளதால், பிரியாணி மற்றும் விரைவு உணவு வகைகளுக்கு ஏற்றது.
கோ.56 (CO 56)
இந்த இரகம், கோ.ஆர்.50 மற்றும் சி.பி.05501 இரகத்தைக் கலப்புச் செய்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால், 2023-இல் உருவாக்கப்பட்டது. இது, சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில், 130-135 நாட்களில் விளையும். இதன் விளைச்சல் திறன் ஏ.டீ.டி.49 இரகத்தை விட 10.26 சதவீதம், பி.பி.டி. 5204 இரகத்தை விட 14.30 சதவீதம் அதிகமாகும். எக்டருக்கு 6,372 கிலோ விளைச்சலைத் தரும்.
தண்டுத் துளைப்பான், ஆனைக்கொம்பன், குலைநோய், பாக்டீரிய இலைக்கருகல், இலையுறை அழுகல், பழுப்புப் புள்ளி நோய், இலையுறைக் கருகல், துங்ரோ மற்றும் நெல் மணிகளின் நிறமாற்றத்தை மிதமாக எதிர்க்கும் திறனுள்ளது. இதன் அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும். அரவைத் திறன் 67 சதம், முழு அரிசி காணும் திறன் 64.10 சதம் இருக்கும். இதன் சாதம் 1.61 சதம் நீளும் என்பதால், சமைப்பதற்கு ஏற்றதாகவும், உபரியாகும் தன்மையையும் பெற்றுள்ளது.
கோ.53 (CO 53)
இந்த இரகம், (Samba season) பி.கே.எம்.(ஆர்)3 மற்றும் நொறுங்கன் இரகத்தின் கலப்பில் 2020-இல் உருவாக்கப்பட்டது. குறுகிய கால வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பயிரிட ஏற்றதாகவும் உள்ளது. மானாவாரியில் எக்டருக்கு 3,718 கிலோ விளைச்சலைத் தரவல்லது. ஆயிரம் மணிகளின் எடை 24 கிராம் ஆகும். இதன் அரிசி, குட்டைப் பருமனுடன். வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த இரகத்தின் அரவைத் திறன் 69.6 சதமாகும். முழு அரிசி காணும் திறன் 59.6 சதமாகும்.
இந்த இரகம், இலையுறை அழுகல், இலைப்புள்ளி, துங்ரோ வைரஸ், குலை நோய் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் மிக்கது. அண்ணா (ஆர்) 4 இரகத்தை விட, இந்த இரகத்தின் வேர்கள் நீளமாக, அடர்த்தியாக மற்றும் வறட்சியைத் தாங்கக் கூடியதாக இருப்பதால், தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.
கோ.43 (சப் 1) (CO. 43 சப் 1)
இந்த இரகம், கோ.43 மற்றும் எப்.ஆர்.13 ஏ இரகத்தைக் கலப்புச் செய்து, மரபணுக் குறிப்பான்கள் உதவியுடன் 2017-இல் வெளியிடப்பட்டது. அதிக நீர்த் தேக்கத்தைத் தாங்கி வளரும் இதன் வயது 135-140 நாட்களாகும். இதன் சராசரி விளைச்சல் எக்டருக்கு 6,000 கிலோவாகும். இந்த இரகம், குலைநோய், பாக்டீரிய இலைக்கருகல், துங்ரோ வைரஸ், பழுப்பு இலைப்புள்ளி மற்றும் இலையுறைக் கருகல் நோயை மிதமாக எதிர்க்கும் திறன் உடையது.
மத்திய பயிர் இரகங்கள் வெளியீட்டுக் குழுவின் மூலம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் இந்த இரகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இரகம் அதிகளவில் நீர்த் தேங்கும் இடங்கள் மற்றும் உவர் நிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.
திருச்சி 5 (TRY 5)
இந்த இரகம், திருச்சி 2 இரகத்தை மரபு மாற்றம் செய்து, 2022-இல் உருவாக்கப் பட்டது. உவர் நிலங்களில் பயிரிட ஏற்றது. குறுகிய காலத்தில், அதாவது, 115-120 நாட்களில் விளையக் கூடியது. எக்டருக்கு 5,100 கிலோ விளைச்சலைத் தரவல்லது. அரிசி, சன்னமாக இருக்கும். சமையலுக்கு ஏற்ற மத்திய இரகம், அதிக அரவைத் திறனும், முழு அரிசி காணும் திறனும் கொண்டுள்ளது.
கேகேஎம் 1 (KKM1)
இந்த இரகம். கதிரியக்கம் மூலம் மரபணு மாற்றம் அடைந்த வெள்ளைப் பொன்னியில் இருந்து 2024-இல் உருவாக்கப்பட்டது. இது, முன்குறுவை, முன்கார், பிந்திய பிசானம் ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. இதன் வயது 120 நாட்கள் ஆகும். இந்த இரகம் (Samba season) எக்டருக்கு 6,102 கிலோ விளைச்சலைத் தரவல்லது. நடுத்தர உயரம். நிமிர்ந்த பயிர், சாயாத தன்மை, நெருக்கமான பயிர் அமைப்பு மற்றும் முற்றிலும் வெளிவரும் நெருக்கமான கதிர்கள் ஆகியன இதன் சிறப்புகளாகும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 15.6 கிராம் ஆகும்.
அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிக அரவைத் திறன், முழு அரிசி காணும் திறன் மற்றும் நடுத்தர அமைலோஸ் அளவைக் கொண்டுள்ளது. இது, சமைத்த பிறகு வெள்ளை நிறத்தில் ஒன்றுடன் ஒன்று ஒட்டமாலும், சீராகவும் இருக்கும். சாதமும் மாவுப்பண்பும் வெள்ளைப் பொன்னிக்கு இணையாக இருக்கும்.
தண்டுத் துளைப்பான் மற்றும் இலை மடக்குப் புழுவை மிதமாக எதிர்க்கும். குலை நோய், இலையுறைக் கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோயை மிதமாக எதிர்க்கும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது.
டி.கே.எம்.15 (TKM 15)
இந்த இரகம், டி.கே.எம்.12 மற்றும் ஐ.இ.டி.2160 இரகத்தை இணைத்து 2022-இல் உருவாக்கப்பட்டது. வறட்சியைத் தாங்கி வளரும் இந்த இரகத்தின் வயது 115-120 நாட்களாகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் விதைப்புக்கும். வடகிழக்குப் பருவமழைக் காலமான. செப்டம்பர் அக்டோபரில் விதைப்பதற்கும் ஏற்றது. நடுத்தர உயரம், அதிகத் தூர்க்கட்டும் திறன். அடர்த்தியான கதிர்கள் மற்றும் சாயாத தன்மை கொண்டது.
இந்த இரகம் (Samba season) மானாவாரியில் எக்டருக்கு 3,995 கிலோ, பகுதிப்பாசன முறையில் 4,217 கிலோ விளைச்சலைத் தரும். அரிசி, வெள்ளை நிறத்தில் நடுத்தரச் சன்னமாக இருக்கும். இதன் அரவைத் திறன் 68 சதமாகும். முழு அரிசி காணும் திறன் 62.9 சதமாகும்.
தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு, ஆனைக்கொம்பன் ஆகிய பூச்சிகளின் தாக்குதல்களையும், குலை நோய். இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் துங்ரோ வைரஸ் நோய்க்கு மிதமாக எதிர்க்கும் திறன் உடையது.
ASD 21 (ASD 21)
இந்த இரகம், ஏ.எஸ்.டி.21 இரகம், ஏ.எஸ்.டி.16 மற்றும் மஞ்சள் சாரடை இரகத்தைக் கலப்புச் செய்து 2023-இல் உருவாக்கப்பட்டது. முன்குறுவை, முன்கார் மற்றும் பிந்திய பிசானப் பருவத்தில் பயிரிட ஏற்ற இந்த இரகம் 120 நாட்களில் விளையும். எக்டருக்கு 6,330 கிலோ விளைச்சலைத் தரவல்லது. இந்த இரகம், நடுத்தர உயரம், நிமிர்ந்த, சாயாத பயிர் அமைப்பு மற்றும் நெருக்கமான மணிகளைக் கொண்டது.
இதன் அரிசி, குட்டையாகவும் பருமனாகவும், வெள்ளையாகவும் இருக்கும். இதன் ஆயிரம் மணிகளின் எடை 24.4 கிராமாகும். முழு அரிசி காணும் திறன் 59.3 சதமாகும். நடுத்தர அமைலோஸ் 21.5 சதமாகும். சாதம் காணும் திறன் 4.1 சதமாகும். இதன் சோறு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சீராக இருக்கும். இந்த இரகம் தண்டுத் துளைப்பான், இலை மடக்குப்புழு, குலைநோய், இலையுறை அழுகல் ஆகிய நோய்களை மிதமாக எதிர்க்கும் திறன் கொண்டது.
காரைக்கால் 5 (KKAL 5)
இந்த இரகம், ADT45, FL478, CSR27 என்னும் மரபியல் சேர்க்கை மூலம், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது.(Samba season) இது, சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்துக்கு ஏற்றது.
ஆரம்ப வளர்ச்சி நிலை மற்றும் இனப்பெருக்க நிலையில் ஏற்படும் உப்புத் தன்மையை நன்றாகத் தாங்கி வளரக் கூடியது. இதற்கு, மத்திய குழுவின் அங்கீகாரம் இருப்பதால், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பயிரிடுவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த இரகம், டெல்டா மற்றும் கடலோரப் பகுதி விவசாயிகளின் நீண்ட காலத் தேவையை நிறைவு செய்யும் வகையில் உள்ளது. சொர்ணவாரி மற்றும் குறுவையில் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. இதன் மிக முக்கியச் சிறப்பு, மண்ணிலுள்ள உப்புத் தன்மையைத் தாங்கி வளர்வதாகும்.
இதன் வயது 115-120 நாட்களாகும். இதன் அரிசி வெள்ளை நிறத்தில், நடுத்தர நீளத்தில் சன்னமாக இருக்கும். இது, பாக்டீரிய இலைக்கருகல் நோய், குலை நோய், இலையுறை அழுகல் நோய், துங்ரோ வைரஸ் ஆகிய நோய்களை மிதமாக எதிர்க்கும் திறனுள்ளது.
காரைக்கால் 4 (KKL(R)4)
இந்த இரகம்,(Samba season) வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைத் தாங்கி வளரும் வகையில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் தேங்கும் நீரைத் தாங்கி வளரும் திறனுள்ளது. இதன் வயது 120-125 நாட்கள். இந்த இரகம் தாளடி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. இயல்பான நிலையில் எக்டருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும். வெள்ளப் பாதிப்பின் போது எக்டருக்கு 4 டன் மகசூல் கிடைக்கும்.
அரிசி, நடுத்தரமாகவும் தடித்தும் இருக்கும். இதன் ஆயிரம் மணிகளின் எடை 22.3 கிராமாகும். அரிசியில் சீரான ஸ்டார்ச் இருப்பதால், சாதம் சமைக்கவும் சிற்றுண்டிகள் தயாரிக்கவும் ஏற்றது. இலைக்கருகல் மற்றும் தானிய நிறமாற்றத்தை எதிர்க்கும் சக்தி மிக்கது.
விவசாயிகள் தங்களின் வயல் சூழ்நிலைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து, அவற்றின் சான்று பெற்ற விதைகளை, வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது தனியார் கடைகளில் பெற்று, முறையான உத்திகளைக் கடைப்பிடித்து சாகுபடி (Samba season) செய்து, அதிக விளைச்சலும் இலாபமும் பெற்றுப் பயனடைய வேண்டுகிறோம்.

ச.கண்ணன்,
விதைச் சான்று அலுவலர், சே.விஜயா, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர், மயிலாடுதுறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

