My page - topic 1, topic 2, topic 3

 மகளிர் மேம்பாட்டில் இரு சக்கர வாகனங்கள்!

 மகளிர் மேம்பாட்டில் இரு சக்கர வாகனங்கள்!

ம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மகளிர் மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். அவ்வகையில், பணியிலுள்ள மகளிர்க்கு 50% மானியத்தில் இரு சக்கர வாகனங்களை வழங்கும், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் தொடங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். அந்த அறிவிப்பைத் திட்டமாக்கித் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை, அம்மாவின் பிறந்த நாளான 24.02.2018 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.  

நாமக்கல் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ், 2017-2018 ஆண்டில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1459 பயனாளிகள், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 995 பயனாளிகள் என, மொத்தம் 2,454 பயனாளிகளுக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் அல்லது சுய தொழில் செய்யும் பெண்கள், தாங்கள் விரும்பும் கியர் இல்லாத, ஆட்டோ கியர் உள்ள 125 சி.சி.க்கு மிகாத, 01.01.2018க்குப் பின்பு தயாரிக்கப்பட்ட புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ரூ.25,000 மானியம் அல்லது வாகனத்தின் மதிப்பில் 50%, இவற்றில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மகளிர் திட்டம் ஆகிய  அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட்டது. அம்மா இரு சக்கர வாகனத்தைப் பெற விரும்பும் பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். வயது 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தை ஓட்ட தெரிந்தும், அதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றும் இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும். வாகனத்தின் மொத்தத் தொகையில் அரசு மானியம் ரூ.25,000 போக, மீதித் தொகையைச் செலுத்த விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, விண்ணப்பதாரர் பெயரிலுள்ள இதர பயன்படுத்திய பட்டியல்கள், இருப்பிடச்சான்று, தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிம நகல், வேலை கொடுக்கும் அதிகாரி அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டு வருமானச் சான்று, பணி புரிவதற்கான சான்று, கல்விச்சான்று, மார்பளவு புகைப்படம், சாதிச்சான்று, உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பயனாளிகள் பெற விரும்பும் இரு சக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவற்றை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 03.03.2018 அன்று நடைபெற்ற, மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் விழாவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர், 128 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கினர்.

அவ்வகையில், அம்மா இரு சக்கர வாகனத்தைப் பெற்ற நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி, ஆர்.புதுக்காலனியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகள் செல்வி க.கவிதா (26) தெரிவித்ததாவது:

“எனது பெயர் கவிதா. நான் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கணினி இயக்குபவராகப் பணி புரிகிறேன். எனது பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். எங்கள் குடும்பம் மிகுந்த வறுமையில் இருப்பதால், நானும் வேலைக்குப் போக வேண்டியுள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கம்பெனிக்குப் பேருந்தில் மிகவும் சிரமத்துடன் சென்று வந்து கொண்டிருந்தேன். இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கலாம் என்றால் அந்தளவுக்கு வசதியில்லை. 

இந்த நேரத்தில் தான் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள், ஏழை எளிய உழைக்கும் மகளிருக்கு 50 சதவிகித மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்த திட்டம் செயல்படப் போவதாக அறிந்தேன். உடனே நான், பெட்ரோல் ஸ்கூட்டர்  வேண்டி ஆர்.புதுப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தேன். மேலும்,    ஹீரோ ஹோண்டா ஸ்கூட்டியை ரூ.69,000க்கு வாங்கியதற்கான ஆவணத்தையும் அலுவலகத்தில் கொடுத்தேன். எனவே, எனக்கு 03.03.2018 அன்று நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெருமக்கள் இரு சக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கினார்கள். இனி, நான் எவ்விதச் சிரமமுமின்றி வேலைக்குச் சென்று வருவேன். எனது வருவாயின் மூலம் எனது குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்ற முடியும்.

எங்களைப் போன்ற ஏழை எளிய உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அளித்த, தாயுள்ளம் கொண்ட அம்மாவுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டவராக இருப்பேன்’’ என்று நெஞ்சுருகி தெரிவித்தார்.

அடுத்து, நாமக்கல் மாவட்டம் கொமராபாளையம் நகராட்சியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகள் செல்வி பவித்ரா (26) தெரிவித்ததாவது:

“என் பெயர் பவித்ரா. நான் எம்.இ படித்துவிட்டு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது தந்தை மாதேஸ்வரன். அவர் பவர்லூமில் வேலை செய்து வருகிறார். தாயார் வெங்கடேஸ்வரி. அவர் வீட்டில் குச்சிப் பைகளைத் தைத்து வருகிறார். பேருந்தில் கூட்டம், நேரத்திற்குப் பேருந்து இல்லாமல் போவது போன்ற காரணங்களால் அன்றாடம் வேலைக்குப் போய் வருவது கஷ்டமாக இருந்தது. ஒரு ஸ்கூட்டர் வாங்கினால் எளிதாக வீட்டிற்கும், கல்லூரிக்கும் சென்று வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் குடும்பத்திலுள்ள வறுமையால் ஸ்கூட்டரை வாங்க இயலவில்லை.

இந்த நிலையில், எனது கனவு நிறைவேறும் விதமாகத் தமிழக அரசு, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கப் போவதாக அறிந்தேன். உடனே, குமராபாளையம் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் செய்தேன். இப்போது, இந்தத் திட்டத்தில் மானியத்துடன் அம்மா இரு சக்கர வாகனம் எனக்குக் கிடைத்துள்ளது. இப்படியொரு அருமையான திட்டத்தைத் தந்த அம்மாவுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது ஆயுள் உள்ளவரை நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்’’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.

அடுத்து, நாமக்கல் மாவட்டம் பரமத்திப் பேரூராட்சி, ஓவியம் பாளையத்தைச் சேர்ந்த நல்லுசாமி மனைவி மோகனாம்பாள் (36) தெரிவித்ததாவது:

“எனது பெயர் மோகனாம்பாள். நான் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் பெயர் நல்லுசாமி. எனக்குக் கோபிகா என்ற மகளும், தமிழ்ச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் எனது கணவர் இருதய நோயால் இறந்து விட்டார். அதனால், ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். எனது வருமானத்தை வைத்துக் குடும்பச்செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவுகளைச் செய்வதற்கே சிரமப்பட்டு வருகிறேன். நான் 2 பேருந்துகளில் மாறித்தான் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேரத்துக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனம் வாங்கலாம் என்றாலும் போதிய பணவசதி இல்லை.

இந்த நிலையில், பணிபுரியும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை அறிந்து, பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி பரமத்திப் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தேன். ரூ.69,000க்கு ஸ்கூட்டியை வாங்கியுள்ளேன். இப்போது, எனக்கு ரூ.25,000 மானியம் கிடைத்துள்ளது. இந்த வண்டியால் நான் சிரமமில்லாமல் வேலைக்குச் சென்று வர முடியும். கணவரை இழந்து கண்ணீரில் தத்தளித்து வந்த எனக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் கிடைக்க வாய்ப்பளித்த, முன்னாள் முதல்வர் அம்மாவுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களைப் பெற்ற பயனாளிகள் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயனடைந்து வரும் பயனாளிகள் அனைவரும், அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!