இன்றைய சூழ்நிலையில் விளைச்சலைப் பெருக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் அவசியமாகும். செயற்கை உரங்கள் பயிர்களின் அப்போதைய தேவையை மட்டுமே சரி செய்கின்றன. நீடித்த நிலைத்த வேளாண்மைக்கு இயற்கை உரங்கள், முக்கியமாகப் பசுந்தாள் உரப்பயிர்கள் (Green Manure crops) மிகவும் அவசியமாகும். இந்த உரப்பயிர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும், மண்வளம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகின்றன.
பசுந்தாள் உரங்கள்
சணப்பை, தக்கைப்பூண்டு, சீமையகத்தி, தட்டைப்பயறு, பில்லிப்பயறு போன்றவை முக்கியப் பசுந்தாள் உரப்பயிர்கள் (green manure crops) ஆகும். இவை பூக்கும் சமயத்தில், இவற்றைப் பயிரிட்ட நிலங்களிலேயே மடக்கி உழ வேண்டும். இவ்வகையில், ஒரு எக்டர் நிலத்தில் 15-20 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும். இந்த உரத்தின் மூலம், 50-70 கிலோ தழைச்சத்தும், 10-20 கிலோ மணிச்சத்தும், 40-60 கிலோ சாம்பல் சத்தும் கிடைக்கும்.
Nutrients in green manure crops
பசுந்தாள் உரப்பயிர்களில் உள்ள சத்துகள்
சணப்பில், 3.50 சதவீதத் தழைச்சத்தும், 0.60 சதவீத மணிச்சத்தும், 1.20 சதவீதச் சாம்பல் சத்தும் இருக்கும்.
தக்கைப்பூண்டில், 2.30 சதவீதத் தழைச்சத்தும், 0.50 சதவீத மணிச்சத்தும், 1.80 சதவீதச் சாம்பல் சத்தும் இருக்கும்.
அகத்தியில் 2.71 சதவீதத் தழைச்சத்தும், 0.53 சதவீத மணிச்சத்தும், 2.21 சதவீதச் சாம்பல் சத்தும் இருக்கும்.
தக்கைப்பூண்டு
பருவம் : போதிய நீர்வசதி இருப்பின் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
மண்: எல்லா நிலங்களிலும் பயிரிடலாம்.
விதையளவு: உர சாகுபடிக்கு எக்டருக்கு 50 கிலோ, விதை உற்பத்திக்கு 20 கிலோ.
விதை நேர்த்தி: எக்டருக்கு 5 பொட்டலம் ரைசோபியம் வீதம் தேவை.
இடைவெளி: உரப்பயிர் உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு, 45×20 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 100-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் எக்டருக்கு 20 டன். விதை 500-600 கிலோ.
சணப்பு
பருவம் : விதை உற்பத்திக்கு மார்ச் ஏப்ரலில் விதைக்கலாம்.
மண்: வண்டல் மண் ஏற்றது. நீர் நிற்கும் நிலம் ஏற்றதல்ல.
விதையளவு: உர சாகுபடிக்கு எக்டருக்கு 50 கிலோ, விதை உற்பத்திக்கு 20 கிலோ.
விதை நேர்த்தி: எக்டருக்கு 5 பொட்டலம் ரைசோபியம் வீதம் தேவை.
இடைவெளி: உரப்பயிர் உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு, 45×20 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 150-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் எக்டருக்கு 13-15 டன். விதை 400 கிலோ.
நரிப்பயறு
பருவம்: ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மார்ச் ஏப்ரல் விதைப்பு விதை உற்பத்திக்கு ஏற்றது.
மண்: நெல் தரிசு களிமண் மிகவும் ஏற்றது.
விதையளவு: உர சாகுபடி மற்றும் விதை உற்பத்திக்கு எக்டருக்கு 10-15 கிலோ.
இடைவெளி: உர உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு, 30×10 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 150-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் எக்டருக்கு 10-13 டன். விதை 400-500 கிலோ.
கொளுஞ்சி
பருவம்: முளைப்பதற்கு ஈரப்பதம் இருப்பின் ஆண்டு முழுவதும் விதைக்கலாம். மார்ச் ஏப்ரல் விதைப்பு விதை உற்பத்திக்கு ஏற்றது.
மண்: எல்லா மண் வகைகளிலும் வளரும்.
விதையளவு: உர சாகுபடி மற்றும் விதை உற்பத்திக்கு எக்டருக்கு 15-20 கிலோ.
இடைவெளி: உர உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு, 30×10 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 150-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் (Green Manure crops) எக்டருக்கு 6-7 டன். விதை 400-500 கிலோ.
சிறப்புகள்: கால்நடைகள் மேயாது. மெதுவாக வளரும். தொடர்ந்து 2-4 முறை பயிரிட்டு விட்டால், விதைகள் தாமாக விழுந்து முளைக்கத் தொடங்கி விடும். கடுமையான வறட்சியைத் தாங்கி வளரும்.
சித்தகத்தி
பருவம்: போதிய நீர்வசதி இருப்பின் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
மண்: எல்லா மண் வகைகளிலும் வளரும்.
விதையளவு: உர உற்பத்திக்கு எக்டருக்கு 30-40 கிலோ, விதை உற்பத்திக்கு 15 கிலோ.
விதை நேர்த்தி: எக்டருக்கு 5 பொட்டலம் ரைசோபியம் வீதம் தேவை.
இடைவெளி: உர (Green Manure crops) உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு, 45×20 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 45-60 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 130-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் எக்டருக்கு 15-18 டன். விதை 400-550 கிலோ.
மணிலா அகத்தி
பருவம் : ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
மண்: களிமண் மற்றும் செம்மண்ணில் நன்றாக வளரும்.
விதையளவு: உர உற்பத்திக்கு எக்டருக்கு 30-40 கிலோ, விதை உற்பத்திக்கு 15 கிலோ.
விதை நேர்த்தி: எக்டருக்கு 5 பொட்டலம் ரைசோபியம் வீதம் தேவை.
இடைவெளி: உர உற்பத்திக்கு, கை விதைப்பு முறை. விதை உற்பத்திக்கு 45×20 செ.மீ. இடைவெளி.
பாசனம்: 15-20 நாட்களுக்கு ஒருமுறை.
உரம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு: தேவையில்லை.
அறுவடை: விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடக்கி உழ வேண்டும். அல்லது 150-ஆவது நாளில் விதைகளைச் சேகரிக்க வேண்டும்.
விளைச்சல்: பசுந்தாள் உரம் எக்டருக்கு 40-50 டன். விதை 400-500 கிலோ.
பசுந்தாள் உரப்பயிர்களின் நன்மைகள்
பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்த இந்த உரப்பயிர்கள், எக்டருக்கு 20-40 கிலோ வீதம், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தும்.
மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகுவதற்கு (Green Manure crops) உதவும்.
இந்த உரப்பயிர்கள் மட்கும் போது வெளிவரும் அங்கக அமிலங்கள், மண்ணிலுள்ள மணிச்சத்தைக் கரைத்துக் பயிருக்குக் கிடைப்பதற்கு வகை செய்யும்.
மண்ணின் அமைப்பை மேம்படுத்தும்.
நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.
மண்ணின் கீழடுக்கில் உள்ள பயிர்ச் சத்துகளை உறிஞ்சி மேற்பரப்புக்குக் கொண்டு வந்து பயிர்கள் நன்கு வளர உதவும்.
நீரானது மண்ணுக்குள் விரைவாகச் செல்ல வகை செய்து, மண்ணரிப்புக் குறையக் காரணமாக விளங்கும்.
மண்ணுக்கு ஊட்டமளித்து மண்வளத்தைக் காக்கும்.
களைச்செடிகளின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியைக் குறைக்கும்.
காரத்தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்த உதவும்.
வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த உதவும்.

முனைவர் ப.அய்யாத்துரை,
சிறுதானிய மகத்துவ மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், அத்தியந்தல், திருவண்ணாமலை – 606 603. முனைவர் ப.துக்கையண்ணன், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வாகரை, திண்டுக்கல் – 624 613. முனைவர் இரா.சத்தியப்பிரியா, ஆராய்ச்சி மாணவி, உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.