My page - topic 1, topic 2, topic 3

கால்நடை மருத்துவத் திட்டங்கள்!

கால்நடை மருத்துவத் திட்டங்கள்!

ல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்னும் பாடலுக்கு ஏற்ப, தமிழகத்தில் வளமான நிலையை உண்டாக்க, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெறும் வகையில், எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றித் தந்துள்ளார். மகளிர் வாழ்க்கைத் தரம் மேம்படவும், ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நல்ல வருவாயை ஈட்ட வேண்டும் என்பதற்காகவும், ஏழை மகளிருக்கு விலையில்லாக் கறவை மாடுகள் மற்றும் விலையில்லா ஆடுகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அவ்வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரையில், 450க்கும் மேற்பட்ட ஏழை மகளிருக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கறவைப் பசுக்கள் 879 கன்றுகளை ஈன்றுள்ளன. 18,778 ஏழை மகளிர்க்கு தலா 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்ட 75,112 ஆடுகள், 2,04,554 குட்டிகளை ஈன்றுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்புச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்திட, கால்நடைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில், 1962 என்னும் இலவச நடமாடும் கால்நடை மருத்துவச் சிகிச்சை ஊர்தித் திட்டமும், நடமாடும் கால்நடை மருத்துவக்குழுத் திட்டமும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம், நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நடமாடும் கால்நடைச் சிகிச்சை ஊர்தி வைக்கப்பட்டுள்ளது. பசுக்கள் கன்றுகளை ஈன முடியாத நிலை போன்ற ஈற்றுக்காலச் சிக்கல்கள், கருப்பை முறுக்கம், கருப்பை வெளித்தள்ளுதல், விபத்தில் கால்நடைகள் பாதிக்கப்படுதல், பாம்புக்கடி, வயிறு உப்புசம் உள்ளிட்ட சிக்கல்களுக்குச் சிகிச்சையளிக்கவும், கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சிகிச்சைக்காகக் கால்நடைகளைக் கொண்டு செல்லவும் இந்த ஊர்தி பயன்படுகிறது. இந்த ஊர்தியை வரவழைக்க 1962 என்னும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் போதும்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஊர்தியின் மூலம், 2016 நவம்பர் மாதத்தில் மூன்று பசுக்களுக்கும், டிசம்பர் மாதத்தில் ஐந்து பசுக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் ஏழு மாடுகளும், ஒரு ஆடும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு, இலவச உயர் சிகிச்சையின் மூலம் காக்கப்பட்டுள்ளன. 2017 சனவரியில் ஐந்து பசுக்கள், ஒரு எருமைக்கு அவற்றின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சையளிக்கப் பட்டுள்ளன. மேலும், ஒரு பசுவும், ஒரு எருமையும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஊர்தியின் மூலம் கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சையின் மூலம் காக்கப்பட்டுள்ளன.

கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில், கால்நடைகளுக்குச் சிறப்புச் சிகிச்சையளிக்க, நடமாடும் கால்நடை மருத்துவக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதற்கான வாகனத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிக்கும் சென்று இக்குழுவானது மருத்துவச் சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இக்குழுவில், கால்நடை மருத்துவர் ஒருவர், கால்நடை ஆய்வாளர் ஒருவர், கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் இருவர் உள்ளனர். இந்தக் குழுவினர் ஒரு வாரத்தில் 15 முதல் 20 கிராமங்களுக்குச் சென்று, கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கச் சிகிச்சை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவத் திட்டங்கள்!

நடமாடும் மருத்துவக்குழு ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 மதிப்பிலான மருந்து, மாத்திரைகள், மருத்துவப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய மூன்று இடங்களில் இக்குழுக்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதுவரையில், கிராமப்புறங்களில் உள்ள 18,000க்கும் மேற்பட்ட மாடுகளுக்கும், 1,500க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும் பல்வேறு சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், 4000க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் எருமைகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் மற்றும் சினைப்பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில், நடமாடும் இலவசச் சிகிச்சை ஊர்தி மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவக்குழு மூலம் பயனடைந்த சிலரைச் சந்தித்துப் பேசினோம். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், நா.புதுப்பட்டி மேலராஜ வீதியைச் சேர்ந்த 55 வயதான ப.பாப்பாத்தி, நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவின் மூலம் பயன்பெற்றது குறித்துக் கூறியதாவது:

“நானும் என் கணவரும் மட்டும்தான் உள்ளோம். எங்களுக்குப் பிள்ளையில்லை. சொந்தமாக நிலமும் இல்லை. கூலி வேலைக்குச் சென்றால்தான் சாப்பிட முடியும். வேலையும் தொடர்ந்து கிடைக்காது. வயதும் ஆகி விட்டதால் தொடர்ந்து வேலை செய்யவும் முடியவில்லை. அதனால் கஷ்டமான நிலையில்தான் இருந்தோம். இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா கொண்டு வந்த ஏழை மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம், எனக்கு 4 ஆடுகளை அரசாங்கம் இலவசமாகக் கொடுத்தது. இந்த ஆடுகளை வளர்த்து வருகிறோம். ஆடுகள் போடும் குட்டிகளை வளர்த்து விற்று எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

எங்களுக்கு ஆடுகள் மட்டுமில்லாமல், இந்த ஆடுகள் நன்றாக வளர்வதற்குத் தேவையான இலவசச் சிகிச்சைகளும் அம்மா மூலம் கிடைத்துள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் எங்கள் ஊருக்கே வந்து எங்கள் ஆடுகளைச் சோதித்துப் பார்த்தார்கள். குடற்புழுக்களை நீக்குவதற்கு மருந்து கொடுத்தார்கள். ஆடுகளை நன்றாக வளர்ப்பதற்கான ஆலோசனைகளையும் சொன்னார்கள். இந்தத் திட்டம் இல்லையென்றால், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் நாங்கள் ஆடுகளைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இப்போது எங்களுக்கு அந்தச் சிரமம் இல்லை. இப்படி ஏழை மக்களுக்கான திட்டத்தைத் தந்து எங்கள் இதயத்தில் என்றென்றும் வாழும் முன்னாள் முதல்வர் அம்மாவுக்கும், தமிழக அரசுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவின் மூலம் பயனடைந்த, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், நா.புதுப்பட்டி தெற்குத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 68 வயதான அ.துரைசாமி பெருமையுடன் தெரிவித்ததாவது:

“நான் ஒரு விவசாயி. என் மனைவி தனபாக்கியம். எங்களுக்குச் சங்கர் கணேஷ், சத்திரியன் என்று இரு மகன்களும், பிரவீனா என்று ஒரு மகளும் உள்ளனர். மூத்த பையனுக்கும், பொண்ணுக்கும் திருமணமாகி விட்டது. இளைய பையனால் பேச முடியாது. எங்களுக்கு மூன்று ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மானாவாரியாகச் சோளம், கம்பு, தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வோம். மேலும், 2 பசுக்களையும், 2 எருமைகளையும் வளர்த்து வருகிறோம்.

தற்போது மழையில்லாததால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. அதனால், மிகவும் சிக்கலான நிலையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இந்தக் கால்நடைகளுக்குத் தடுப்பூசி, சினை ஊசி போடுவதற்கு, குடற்புழு நீக்கம் செய்வதற்குத் தொலைவிலுள்ள கால்நடை மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும். இது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இந்த நேரத்தில், தமிழகத்தின் முதல்வராக இருந்த அம்மா, எங்கள் சிரமங்களைப் போக்கிடும் வகையில், கிராமங்களுக்கே சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்களை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவினர் வாரந்தோறும் கிராமங்களுக்கு வந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இப்படியொரு அருமையான திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

கால்நடை மருத்துவத் திட்டங்கள்!

நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவின் மூலம் பயனடைந்த, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், நா.புதுப்பட்டி மேலராஜ வீதியைச் சேர்ந்த 57 வயதான மு.புஷ்பநாதன் கூறியதாவது:

என் மனைவியின் பெயர் குயிலி. எங்களுக்குப் பூபாலன் என்ற மகனும், தீபிகா என்ற மகளும் உள்ளனர். எங்களுக்கு ரெண்டரை ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழையை நம்பி, சோளம், கம்பு, கால்நடைத் தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வோம். தற்போது மழையும் இல்லாததால் பயிர்கள் எல்லாம் காய்ந்து விட்டன. இந்த நிலையில் நாங்கள் வளர்த்து வரும் 2 பசுக்கள் தரும் பால் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு போன்றவற்றைச் சமாளித்து வருகிறோம். இந்தக் கால்நடைகளுக்கு நோயேதும் வந்து விட்டால், எங்கள் ஊரிலிருந்து தூரத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்குத் தான் மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் எங்களைப் போன்ற கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கே வந்து கால்நடைகளுக்குச் சிகிச்சையை அளிக்கக்கூடிய நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்களைத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்தக் குழுவினர் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று, தடுப்பூசிகள், சினை ஊசிகளைப் போடுதல், சினைப் பரிசோதனை செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகளை அளிக்கிறார்கள். இதனால், எங்களின் கால்நடைகள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன. இதனால், நாங்களும் நிம்மதியாக இருக்கிறோம்.

இப்படி, வாயில்லா ஜீவன்களையும் நோயின்றி வாழ வைக்கும் பெருமை முன்னாள் முதல்வர் அம்மா அவர்களையே சாரும். இத்தகைய சிறப்பான திட்டத்தின் மூலம், எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த அம்மா அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மகிச்சியுடன் தெரிவித்தார்.

இப்படி, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளைக் காப்பதற்கென, 1962 என்னும் இலவசக் கால்நடைச் சிகிச்சை ஊர்தியையும், நடமாடும் கால்நடை மருத்துவக் குழுக்களையும் அமைத்துக் கொடுத்து, வாயில்லா ஜீவன்களையும் வாழ வைத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள். ஏழை மக்கள் வாழ்வதற்கான திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்த அம்மா அவர்கள், இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!