உயிரினங்கள் இந்த மண்ணில் நலமாக வாழ்வதற்கு ஏற்ற நிலையே வளமான சுற்றுச்சூழல் எனப்படுகிறது. இதில், குறிப்பாக மனித சமூகத்தின் நல்ல வாழ்வியல் சூழலைக் கட்டமைப்பதில் கழிப்பிடங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அதனால் தான், மத்திய அரசு, இந்தியாவில் கழிப்பிடம் இல்லாத வீடே இருக்கக் கூடாது என்னும் இலக்கை எட்டுவதற்காகத் தூய்மை பாரதம் இயக்கத்தைக் கொண்டு வந்து மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் ஊராட்சி, பி.மேட்டூரைச் சேர்ந்த கு.பாவாயி, அ.குப்பம்மாள், மு.மீனாட்சி உட்படப் பல்வேறு பயனாளிகள், வடகரையாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த இரா.பாப்பாத்தி, செ.வெண்ணிலா, இரா.காமாட்சி, பெ.கிருஷ்ணவேணி உட்பட பல்வேறு பயனாளிகள், இருக்கூர் ஊராட்சியைச் சேர்ந்த இரவி, பெரியசாமி, இராஜு, சுரேஷ் உட்படப் பல்வேறு பயனாளிகள் 12,000 ரூபாய் மானிய உதவியில் கட்டியுள்ள கழிப்பிடங்களை, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்க, முதல் கட்டமாக ஏழு மாவட்டங்களை அரசு தேர்வு செய்தது. அவற்றில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளையும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக மாற்றத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, மாவட்டம் முழுவதும் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுவரையில், 50.15 கோடி ரூபாய் மானியத்தில் 41,794 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.
மேலும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 இல், தமிழகத்தில் சிறப்பான சுகாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தனிநபர் இல்லக் கழிப்பறைத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, தூய்மை பாரதம் இயக்கம் (ஊரகம்)மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், தனிநபர் கழிப்பிடத்தைக் கட்டுவதற்கு 12,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை ஆக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2015-16 ஆம் ஆண்டில், 2.10.2015 இல் 61 ஊராட்சிகள், 26.1.2016 இல் 46 ஊராட்சிகள் என இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 107 ஊராட்சிகளை, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக மாற்றுவதற்கு, அந்த ஊராட்சிகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், 15.8.2016 இல் 10 ஊராட்சிகள், 21.11.2016 இல் 20 ஊராட்சிகள் என மொத்தம் 30 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளன. மீதமுள்ள 185 ஊராட்சிகளில் 31.3.2017க்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளைக் கட்டிப் பயனுக்குக் கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளில், தூய்மை பாரதம் இயக்கத்தின் மூலம், 12,000 ரூபாய் நிதியுதவி வீதம் 13,922 தனி நபர் இல்லக் கழிப்பிடங்களை அமைக்க, 16.71 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம், 27,872 கழிப்பிடங்களை அமைக்க, 33.45 கோடி ரூபாயும் என மொத்தம் 50.16 கோடி ரூபாயும், பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு மொத்தம் 41,794 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், கழிப்பிடங்கள் இல்லாத 56,889 வீடுகளில், 25,000 கழிப்பிடங்களை அமைக்கும் பணி மூலம், 9064 கழிவறைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. 31.3.2017க்குள் மீதமுள்ள 31,889 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுப் பயனுக்கு வரவுள்ளன. தனி நபர் கழிப்பிடங்கள் மட்டுமின்றி, கழிப்பிடக் கழிவுகள் சேர்வதற்கு எனத் தனியாக மூன்றடி வட்டம், மூன்றடி ஆழத்தில், சிமெண்ட் உறைகளால் ஆன தொட்டிகள் அமைக்கப்பட்டுக் கழிவுநீர் மண்ணுக்குள் செல்ல வகை செய்யப்பட்டு உள்ளது. குடிசை வீடுகளில் கூடக் கழிப்பிடங்களைக் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படித் தனிநபர் கழிப்பிடங்களை அமைக்கும் பணியானது நாமக்கல் மாவட்டத்தில் தீவிர இயக்கமாகச் செயல்படுத்தப்படுகிறது.
இது மட்டுமில்லாமல், அனைத்துப் பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் சுகாதாரச் சூழலை உருவாக்கும் வகையில், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், கழிப்பிடப் பயன்பாடுகளைக் கண்காணித்து உறுதி செய்ய, கல்வி, சுகாதாரம், சமூக நலம், கூட்டுறவு, வருவாய், மின்சாரம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கந்தசாமி, ஆர்.சீனிவாசன், உதவிப் பொறியாளர்கள் ஆர்.இரவி, பழனிச்சாமி, தூய்மை பாரதம் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.அமுதா, பரமத்தி வட்டார மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், இளஞ்சியம்மாள், பணி மேற்பார்வையாளர்கள் சத்யா, முருகேசன், மாதேஸ்வரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

