My page - topic 1, topic 2, topic 3

அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம்!

அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம்!

க்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, பெண்களின் நலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றுதான் அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம் திட்டம். பேறுகாலமான தாய் மற்றும் பச்சிளம் குழந்தையின் நலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டம். நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

பச்சிளங் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், அந்தக் குழந்தைகள் நலமாக வளர்வதற்கும் 16 வகையான பொருட்கள் அடங்கிய, அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் திட்டத்தை, தமிழக முன்னாள் முதல்வர் அம்மா தொடக்கி வைத்தார். அரசு மாவட்டத் தலைமை மருத்துவ மனைகள், அரசு மருத்துவ மனைகள், வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு இந்தப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இவ்வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 12.09.2015 அன்று அமைச்சர் பெருமக்கள், அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகங்களைத் தாய்மார்களுக்கு வழங்கித் தொடக்கி வைத்தார்கள்.  

நாமக்கல் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, 8 அரசு மருத்துவ மனைகள், 15 வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், 38 கூடுதல் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 8 நகர அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் என மொத்தம் 70 அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 11,601 தாய்மார்களுக்கு ரூ.4,64,04,000 மதிப்பீட்டில் அம்மா குழந்தைநல பரிசுப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் சின்னையன்பாளையம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி செ.சரஸ்வதி (30) தெரிவித்ததாவது:

“எனது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நான் வீட்டு வேலைகளைச் செய்து வருகிறேன். ஏழ்மையான நிலையில் இருக்கிறோம். எனக்குச் சுரேஷ்குமார் என்ற மகன் உள்ளான். எனது கணவரின் குறைந்த வருமானம், குடும்பத்தை நடத்தப் போதாத நிலையில், நான் மீண்டும் கர்ப்பமானேன். சோதனைகளைச் செய்வதற்கும் மருந்துகளை வாங்குவதற்கும் முடியாத சூழ்நிலையில், எங்கள் பகுதி கிராமச் சுகாதாரச் செவிலியரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உன்னுடைய நலத்தையும், கருவின் வளர்ச்சியையும் கண்காணித்து, பரிசோதித்து உரிய மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு உனக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும் இலவசமாகக் கிடைக்கும் என்றார்.

மேலும், என்னை எர்ணாபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வளர்ச்சியையும் ஸ்கேன் செய்து பார்த்து மருந்து மாத்திரைகளை இலவசமாகக் கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் அங்குச் சென்று இரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாகப் பெற்று வந்தேன். மேலும், கர்ப்பிணிகள் பரிசோதனைக்குச் செல்லும் நாட்களில், அவர்களுக்கு மதிய உணவையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

எனக்குப் பிரசவ நேரம் நெருங்கியதும் எர்ணாபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பான சிகிச்சையை அளித்ததால், எனக்குச் சுகப் பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்காக 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகத்தை இலவசமாக வழங்கினார்கள்.

குழந்தை மற்றும் தாயின் நலத்தைக் கருத்தில் கொண்டு, எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பொருள்களை யெல்லாம் அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகத்தில் வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்து, நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் ஆர்.என்.பாளையம், அண்ணா நகரைச் சேர்ந்த திருப்பதியின் மனைவி தி.அமுதா (31) தெரிவித்ததாவது:

அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம்!

“எனது கணவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். நான் வீட்டில் வேலை செய்து வருகிறேன். எங்களுக்குச் சபித்திரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நான் மீண்டும் கர்ப்பமடைந்தேன். உடலைப் பரிசோதனை செய்து பார்க்கும் அளவுக்கு எங்களிடம் பண வசதியில்லை. இந்த நிலையில், அரசு மருத்துவ மனையில் இலவசமாகச் சிகிச்சைகளும், பரிசோதனைகளும் அளிக்கப்படுவதாக எங்கள் பகுதி சுகாதாரச் செவிலியர் தெரிவித்தார். அத்துடன் என்னை எர்ணாபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவர்கள், எனக்கு அனைத்துப் பரிசோதனைகளையும், மருந்து மாத்திரைகளையும் இலவசமாகத் தந்தார்கள். மேலும், கருவுற்று இருப்பதால் சத்தான காய்கறிகள், கீரை, பழங்களை நிறையச் சாப்பிட வேண்டும் என்று ஆலோசனையும் கூறினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் அங்கே சென்று பரிசோதனைகளைச் செய்து வந்தேன். பேறுகாலம் நெருங்கியதும் அந்த மருத்துவ மனையில் சேர்ந்தேன். அங்குள்ள மருத்துவர்கள் தொடர்ந்து நல்ல சிகிச்சைகளை அளித்தார்கள். அதனால் எனக்குச் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நானும் எனது குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளோம். எங்களைப் போன்ற ஏழைகள், பச்சிளம் குழந்தைகளை நன்றாகப் பராமரிப்பதற்கு ஏதுவாக, உயர்ரக சோப்பு, ஷாம்பு, துண்டு போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவது வெறும் கனவாகவே இருந்து வந்தது.

ஆனால், தாயுள்ளம் கொண்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள், எங்களின் கனவை நிறைவேற்றும் வகையில், அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் திட்டத்தை நிறைவேற்றித் தந்துள்ளதை என்றும் மறக்க முடியாது. அத்தோடு எனக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.4,000 வீதம் 12,000 ரூபாய் மகப்பேறு நிதியுதவியாகக் கிடைத்தது.

இத்தகைய பயனுள்ள திட்டத்தைத் தந்து எங்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் முன்னாள் முதல்வர் அம்மாவுக்கும், இதைத் தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பெருமையுடன் கூறினார்.    

அடுத்து, நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம், மஞ்சநாய்க்கனூரைச் சேர்ந்த முருகேசனின் மனைவி மு.கோமதி (29) கூறியதாவது:

அம்மா குழந்தைநலப் பரிசுப் பெட்டகம்!

“எனது கணவர் ஒலிப்பெருக்கிக் கடையில் வேலை செய்து வருகிறார். விஷேச நாட்களில் மட்டும்தான் அவருக்கு வேலை கிடைக்கும். நான் விவசாயக் கூலிவேலை செய்து வருகிறேன். இருவரின் வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்து 5 வயதாகிறது. இப்போது நான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன். கருவுற்றது முதல் நாமக்கல் எர்ணாபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை, இரத்தப் பரிசோதனையை இலவசமாகச் செய்து கொள்வதோடு, மருந்து மாத்திரைகளையும் இலவசமாகப் பெற்று வருகிறேன்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான சோதனைகளையும், சிகிச்சைகளையும் இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாக அளிக்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை  நன்கு சொல்லிக் கொடுக்கின்றனர். கருவில் வளரும் குழந்தையும் தாயும் நலமாக இருக்க வேண்டுமானால், சத்தான உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

இதற்காக டாக்டர் முத்துலட்சும் ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்தும் தமிழக அரசு, மகப்பேறு நிதியுதவியாக ரூ.12,000  கொடுக்கிறது. இந்தப் பணம் எனக்கு மூன்று தவணைகளில்  கிடைத்தது. மேலும், மாதந்தோறும் எடைப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனையைச் செய்து அதற்குத் தகுந்த வகையில் சிகிச்சைகளை அளிக்கின்றனர். இதையெல்லாம் தனியார் மருத்துவ மனையில் எடுத்தால் ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் எந்தச் செலவும் இல்லாமல், அரசு மருத்துவ மனைகள் மூலம் எங்களைப் போன்ற ஏழைகள் நல்ல சிகிச்சைகளைப் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது தமிழக அரசு. அதனால், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முன்னாள் முதல்வர் அம்மாவுக்கும், தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தாய் சேய் நலத்திற்கான அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும்  நாமக்கல் மாவட்டப் பயனாளிகள் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!