தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் கடந்த 19.06.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள், மாணவ மாணவியர் தங்களின் உயர் கல்விக்காக நெடுந்தொலைவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியைப் பெறுவதற்கு வசதியாகவும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் எனவும் இதற்காக அரசுக்கு ரூ.100 கோடியே 31 இலட்சம் செலவு ஏற்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி மலைப்பகுதியான கொல்லிமலையைச் சேர்ந்த ஏழை, எளிய மலைவாழ் குழந்தைகளும் உயர்கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக, சேந்தமங்கலத்தில் பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 15 ஆசிரியர்கள் மற்றும் 17 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடன் செயல்பட அனுமதியளித்த தமிழக முதலமைச்சர், இக்கல்லூரியின் தொடர் செலவினங்களுக்காக ரூ.92.79 இலட்சத்தையும், தொடரா செலவினங்களுக்காக 31.13 இலட்சத்தையும், நிரந்தரக் கட்டடத்தைக் கட்டுவதற்காக 7,97,50,000 ரூபாயையும் செலவிட அனுமதியளித்து ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியையும் மாணவர் சேர்க்கையையும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் தொடக்கி வைத்தார்கள்.
இக்கல்லூரியில் இந்த ஆண்டு இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளம் வணிகவியல், இளம் அறிவியல் கணிதம் மற்றும் இளம் அறிவியல் தாவரவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளம் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேரும் மாணவ, மாணவியர்க்கு மிகக்குறைந்த கட்டணமாக ரூ.1521, இளம் அறிவியல் கணிதம் மற்றும் இளம் அறிவயல் தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சேரும் மாணவ, மாணவியர்க்கு மிகக்குறைந்த கட்டணமாக ரூ.1541 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மேலும் 5 பாடத்திட்டங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. மேலும் இக்கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.
தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்ற மாணவ, மாணவியர் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தமிழகத்தில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டதன் காரணமாகத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட எண்ணற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சிறப்பாகச் செயல்படுவதுடன், ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவையும் நிறைவேற்றி வருகின்றன.
இவ்வகையில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள புதிய கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:
இளங்கலை தமிழ் பாடப்பிரிவில் பயின்று வரும் கொல்லிமலை வட்டம், திருப்புளி நாடு, புதுவளவுப் பகுதி மலைவாழ் பிரிவைச் சேர்ந்த முருகேசனின் மகள் மு.புனிதவதி (17) மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

“எனது அப்பா பெயர் முருகேசன். அம்மாவின் பெயர் தமிழ்ச்செல்வி. எங்கள் ஊர் நாமக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான கொல்லிமலைப் பகுதியில் உள்ளது. எங்களுக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தைக் கொண்டு எனது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். எனக்குப் பொன்னுதுரை, கோபி என்ற இரு தம்பிகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை நாமக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 729 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்தேன். எனது பெற்றோர் படிக்கவில்லை. கூலி வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு வருகின்றனர். கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டுமென எனக்கு ஆசை இருந்தது. எனது பெற்றோரும் நீயாவது படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டுமெனக் கூறி வந்தனர்.
ஆனால், குடும்பப் பொருளாதார நிலை காரணமாக, உயர் கல்வி படிப்பதற்குச் செல்ல முடியாத நிலையிருந்தது. இன்னொரு பக்கம், படிப்பதற்காக எங்கள் ஊரிலிருந்து அதிகத் தொலைவிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும், தனியார் கல்லூரிகளில் எங்களைப் போன்ற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் உயர் கல்வி படிப்பது என்பது எட்டாக் கனியாக இருந்து வந்தது. இந்த நிலையில், எங்களுடைய கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் சேந்தமங்கலத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உருவாக்கி தந்துள்ளார்கள்.
தற்போது நான் இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் முதலாம் ஆண்டு சேர்ந்து பயின்று வருகின்றேன். இக்கல்லூரியில் சேர்வதற்கு மிகக்குறைந்த கட்டணமான ரூ.1521 மட்டும் செலுத்தினேன். கல்லூரியும் எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே உள்ளதால் சென்று வருவதற்கு எளிதாக உள்ளது. இதனால், கால விரயம், அதிகச் செலவும் தவிர்க்கப்பட்டுள்ளன. எங்களைப் போன்ற மலைவாழ் மக்களின் குழந்தைகள், ஏழை விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகச் சேந்தமங்கலத்தில் கலை அறிவியல் கல்லூரியை உருவாக்கித் தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கு, என் சார்பாகவும், பெற்றோரின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தக் கல்லூரியில் பி.எஸ்.சி.தாவரவியல் பாடப்பிரிவில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயின்று வரும் கொல்லிமலை வட்டம் திருப்புளி நாடு, ஊர்ப்புரம் பகுதியைச் சேர்ந்த திரு.செல்வராஜின் மகள் செ.துர்காதேவி (17) பெருமையுடன் தெரிவித்ததாவது:

“ எனது தந்தை பெயர் செல்வராஜ். தாயார் பெயர் தமிழ்ச்செல்வி. பெற்றோர் இருவரும் விவசாயக்கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். எனக்கு ஸ்ரீதேவி என்ற அக்கா உள்ளார். அவருக்குத் திருமணம் முடிந்து விட்டது. எங்களுக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயம் மூலம் கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு எனது படிப்புச் செலவுகளையும், குடும்பச் செலவுகளையும் எனது பெற்றோர் கவனித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாகச் சரியாக மழை இல்லாததால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் காய்ந்து விட்டன. குடும்பச் செலவுகளுக்கே போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தோம். நான் நாமக்கல் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1200-க்கு 582 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்தேன்.
உயர்கல்வி பயின்று பட்டம் பெற வேண்டும் என்பது எனது கனவு. உயர்கல்வி படிக்க பணம் நிறையத் தேவைப்படும் என்பதால், என்னைப் படிக்க வைக்க வழி தெரியாமல் தவித்து வந்தனர். எங்கள் குடும்பத்தில் யாரும் அதிகளவு படிக்காததால் நானாவது நிறையப் படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென பெற்றோர் விரும்பினர். அவர்களின் ஆசையும், எனது கனவும் நிறைவேறாமல் போய் விடுமோ என்று நானும் வருத்தமாக இருந்தேன். ஆனால், எனது கவலையைப் போக்கி, கனவை நிறைவேற்றிடும் வகையில், சேந்தமங்கலத்தில் பெரியார் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
இக்கல்லூரியில் நான் பி.எஸ்.சி.தாவரவியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றேன். இதற்குக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.1541 மட்டுமே செலுத்திப் பயின்று வருகின்றேன். இவ்வளவு குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியைக் கற்பேன் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. எங்களைப் போன்ற மலைவாழ் குழந்தைகளும், ஏழை, எளியவர்களின் குழந்தைகளும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக, இந்தக் கல்லூரியை அமைத்துத் தந்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.
இங்கே பி.ஏ.ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வரும் சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திரு.முருகேசன் என்பவரின் மகன் மு.சூர்யா (20) என்பவர் பெருமையுடன் தெரிவித்ததாவது,

“எனது தந்தை பெயர் முருகேசன். தாயார் பெயர் மதி. எனக்கு, கார்த்திக் என்ற ஒரு அண்ணன் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்புப் படித்து வருகிறார். எனது பெற்றோர் விவசாயக் கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். மழையில்லாமல் வறட்சியாகிப் போனதால், வேலையுமில்லை; போதிய வருமானமும் இல்லை. கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எங்களுடைய படிப்புச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளைச் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் எனது பெற்றோர் என்னை மேலும் படிக்க வைக்க இயலாது என்று கூறிவிட்டனர். இதனால் எனது உயர்கல்விக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று கவலையோடு இருந்தேன். இந்த நிலையில், எங்களைப் போன்ற ஏழை மாணவர்கள் உயர்கல்வியைப் பயில்வதற்கு, சேந்தமங்கலத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உருவாக்கித் தந்துள்ளார்கள். இதனால், எங்களைப் போன்ற ஏழைக்குழந்தைகள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நான் இக்கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வருகின்றேன். மிகக் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வியைக் கற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மக்களால் நான், மக்களுக்காக நான் என்று மக்களுக்காகவே உழைத்து, பல்வேறு திட்டங்களைத் தந்து அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா. மேலும், கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற பல திட்டங்களை, பள்ளிக்கல்வித் துறையிலும், உயர்கல்வித் துறையிலும் நிறைவேற்றித் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா. அவரின் வழியில், தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் இந்தக் கல்லுரியை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அவருக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
மலைவாழ் மக்களின் குழந்தைகளும் ஏழை எளியோரின் குழந்தைகளும் உயர் கல்வி பயில்வதற்கும், அதன் மூலம் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், சேந்தமங்கலம் பகுதியில், பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரியை உருவாக்கித் தந்துள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மலைவாழ் மக்களின் குழந்தைகள் மற்றும் சேந்தமங்கலம் பகுதி மாணவ, மாணவியர் என்றென்றும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.
