My page - topic 1, topic 2, topic 3

தாலிக்குத் தங்கம் திட்டம்!

தாலிக்குத் தங்கம் திட்டம்!

மூக நலத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்துத் திட்டங்களிலும் பட்டம் அல்லது பட்டயம் படித்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும், 10 – 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகின்றது.

பெண்கல்வியை ஊக்குவிக்கவும், பெண்கள் அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்பதற்காகவும், ஏழைப் பெண்களின் திருமணம் பொருளாதாரச் சூழ்நிலையால் தடைபடக்கூடாது என்பதற்காகவும், தங்கத்தில் தாலி அணிகின்ற தமிழர் பண்பாட்டைக் காத்திடவும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு  திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. இதை, மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், திருமண நிதியுதவியுடன் தாலிக்கான தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி  வழங்கிட ஆணையிட்டு, 21.09.2016 அன்று இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், பட்டம் அல்லது பட்டயம்  9534 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.47.67 கோடி திருமண நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ.11,35,30,872 மதிப்பிலான 38,136 கிராம் (38.136 கிலோ) தங்கமும், 10 – 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில்  8266 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.20.67 கோடி திருமண நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ.9,84,31,528  மதிப்பிலான 33,064 கிராம் (33.064 கிலோ) தங்கமும் என மொத்தம் 17,800 பெண்களுக்கு ரூ.68,33,50,000 (ரூ.68.34 கோடி) திருமண நிதியுதவியுடன் தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ.21,19,62,400 (ரூ.21.19 கோடி) மதிப்பிலான 71200 கிராம் (71.200 கிலோ) தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு  திருமண நிதியுதவியுடன் தாலிக்காக வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக  உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 – 12 ஆம் வகுப்பு வரை படித்த 213 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.53,25,000 (ரூ.53.25 இலட்சம்) திருமண நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.51,90,384 (ரூ.51.90 இலட்சம்) மதிப்பிலான 1704 கிராம் (1.704 கிலோ) தங்கமும், பட்டம் அல்லது பட்டயம் பயின்ற 187 ஏழைப்பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.93,50,000 (ரூ.93.50 இலட்சம்) திருமண நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.45,56,816 (ரூ.45.57 இலட்சம்) மதிப்பிலான 1496 கிராம் (1.496 கிலோ) தங்கமும் என மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ், இதுவரை 7 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 18,200 ஏழைப்பெண்களுக்கு ரூ.69,80,25,000 (ரூ.69.80 கோடி) திருமண நிதியுதவியுடன் தலா 4 கிராம் மற்றும் 8 கிராம் தங்கம் வீதம் ரூ.11,80,87,688 (ரூ.11.81 கோடி) மதிப்பிலான 74,400 கிராம் (74.400 கிலோ) தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, நாமக்கல் மாவட்டம், நாமக்கல் கணேசபுரம், சர்ச் வீதியைச் சேர்ந்த ஜெ.நிர்மலா (54) பொறியியல் பட்டம் பயின்ற தனது மகள் கீர்த்திகா (22) திருமணத்திற்காக ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் பெற்றுக் கொண்டு பெருமையுடன் கூறியதாவது:

“நான் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகின்றேன். எனது கணவர் 19 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். எனக்குக் கீர்த்திகா என்ற ஒரு மகளும், தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். எனது மகள் கீர்த்திகா பி.இ. (எலக்ட்ரானிக்; அண்டு கம்யூனிகேசன்) பட்டமும், மகன் பி.இ. (மெக்கானிக்கல்) பட்டமும் பெற்றுள்ளனர். நான்தான் குடும்ப வறுமையின் காரணமாகவும், அப்போதைய சூழ்நிலை காரணமாகவும் படிக்க முடியாமல் தையல் வேலை மற்றும் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனது நிலைமை என் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது என்று, மிகவும் சிரமப்பட்டு என் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து, என் இலட்சியத்தை நிறைவேற்றி விட்டேன். என் மகளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். நல்ல இடத்தில் வரன் கிடைத்தது.

ஆனால், திருமணத்தை நடத்துவதற்குப் பணமின்றிச் சிரமப்பட்டு வந்தேன். இந்த நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றித் தந்துள்ளதாகவும், பெண்ணின் திருமணத்திற்கு முன்பாகவே இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர். உடனே நான், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலரைச் சந்தித்து இத்திட்டம் குறித்துக் கேட்டேன்.

அவர்களும் திருமண நிதியுதவி  திட்டங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறியதோடு திருமணத்திற்கு முன்பாக விதவை மகள் திருமண நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவிக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்தார்கள். நானும் அவர்கள் கூறியபடி, அனைத்து ஆவணங்களையும் பெற்று மகளின் திருமண அழைப்பிதழையும் சேர்த்து இணையதளத்தில் விண்ணப்பித்தேன். அதிகாரிகளும் நேரில் எங்கள் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்தார்கள். தற்போது என் மகளின் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது. இதைக்கொண்டு என் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தேன்.

எங்களைப் போன்ற ஏழை விதவைத் தாய்மார்களின் மகளின் திருமணத்தை நடத்த, தாயுள்ளத்தோடு 50 ஆயிரம் ரூபாயையும், 8 கிராம் தங்கத்தையும் வழங்கிய, தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன். என் ஆயுள் உள்ளவரை நானும் எனது குடும்பமும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்’’ என பெருமையுடன் தெரிவித்தார்.

அடுத்து, 12 ஆம் வகுப்பு படித்த தனது மகளின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் பெற்ற, நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம், வடக்குப்பட்டியைச் சேர்ந்த அ. செந்தாமரை (47) தெரிவித்ததாவது:

“நான் விவசாயக் கூலித்தொழிலாளி. எனது கணவரும் விவசாயக்கூலித் தொழில்தான் செய்கிறார். இதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் செய்து வந்தோம். என் மகள் சூர்யாவை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்திருந்தேன். வறுமையின் காரணமாக அதற்குமேல் படிக்க வைக்க இயலவில்லை. இந்த நிலையில் என் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்து, மலையம்பட்டியைச் சேர்ந்த கண்ணனை வரனாக முடிவு செய்தோம். வறுமை மற்றும் வறட்சியின் காரணமாக வருமானம் இல்லாமல் இருந்த நாங்கள், எங்களது சொந்த பந்தங்களிடம் கடனுதவி  கேட்டோம். ஆனால் எங்கள் நிலையை அறிந்து யாரும் உதவ முன்வரவில்லை. அதனால், என் மகளின் திருமணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சமூக நலத்துறையின் சார்பில் படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியும் திருமாங்கல்யத்திற்குத் தங்கமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிந்தோம்.

உடனே சமூக நலத்துறை அலுவலகத்திற்குச் சென்று விவரங்களைக் கேட்டேன். அவர்களும் விவரத்தைத் தெரிவித்ததோடு, 10 அல்லது 12ஆம் வகுப்பு படித்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் வழங்குவதாகவும் தெரிவித்தார்கள். இதையடுத்து, 12ஆம் வகுப்பு வரை படித்திருந்த என் மகளின் திருமணத்திற்கான நிதியுதவி வேண்டிய விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக உரிய ஆவணங்களோடு பதிவு செய்திருந்தேன். அதனால், என் மகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரமும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் கிடைத்தது. இதன்மூலம் எனது மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.

வறுமையில் இருந்த எங்களுக்கு உற்றார் உறவினர்கள் கூட உதவி செய்ய முன்வராத நிலையில், நிதியும் தங்கமும் வழங்கி எங்களுக்கு பேருதவி புரிந்த, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும், இத்திட்டத்தை நிறைவேற்றித் தந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும் எங்களது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்து, நாமக்கல் மாவட்டம், பெரியபட்டிப் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகள் செல்வ லட்சுமி (27) என்பவர்  தெரிவித்ததாவது:

“என் தந்தை பெயர் செல்லமுத்து, தாயார் பெயர் எஸ்.பூங்கொடி. நான் பி.இ (இ.சி.இ) பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். எனது தாய் தந்தையர் இருவரும் விவசாயிகள். விவசாய வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் எனது பெற்றோர் என்னைப் பொறியியல் பட்டம் பெற வைத்துள்ளனர். இந்த நிலையில் எனக்குத் திருமணம் முடிப்பதற்கு எனது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். ஏழ்மை நிலையிலிருந்த என் அவர்கள் எனது திருமணத்தை நடத்துவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், சமூக நலத்துறையில் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை அறிந்தேன்.

இதை எனது பெற்றோரிடம் எடுத்துக்கூறி, திருமண நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தோம். தற்போது எனக்குத் திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் கிடைத்துள்ளது. இந்த உதவி என் திருமணத்திற்கு மிகவும் பேருதவியாக இருந்து என் பெற்றோரின் சிரமத்தை முற்றிலும் குறைத்து விட்டது.

எங்களைப் போன்ற ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்திய தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும் எனது சார்பாகவும், என் பெற்றோரின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சமூக நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்ற 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் திருமணத்திற்கு நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் பெற்றுப் பயனடைந்த நாமக்கல் மாவட்ட பயனாளிகள் மட்டுமல்லாது அவர்களைச் சார்ந்தோரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!