My page - topic 1, topic 2, topic 3

சமயத்தில் கிடைத்த பேருதவி!

வான்மழை பொய்த்ததன் காரணமாகத் தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியுதவியை வழங்கும்படி, தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளர்ச்சி ஆகிய துறைகளின் மூலம் சேகரிக்கப்பட்ட வறட்சிப் பாதிப்புக் குறித்த விவசாயிகளின் பட்டியல், வருவாய்த் துறையினர் மூலம் சரிபார்க்கப்பட்டு வறட்சி நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்ட 1,03,883 விவசாயிகளுக்கு ரூ.57,12,34,423 மதிப்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் சேகரிக்கப்பட்ட 27,460 விவசாயிகளுக்கு ரூ.14,78,40,400 மதிப்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதைப்போல, பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் கணக்கெடுக்கப்பட்ட 215 விவசாயிகளுக்கு ரூ.8,09,734 மதிப்பில் வறட்சி நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் நாமக்கல் மாவட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,31,558 விவசாயிகள் ரூ.71,98,84,557 மதிப்பிலான வறட்சி நிவாரண நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.

இப்படி, வறட்சி நிவாரண நிதியுதவியைப் பெற்றுப் பயனடைந்த நாமக்கல் மாவட்டம், வேலக்கவுண்டன்பட்டி மிட்டா அணியார் பகுதியைச் சேர்ந்த ப.தங்கராஜ் (48) தெரிவித்ததாவது:

சமயத்தில் கிடைத்த பேருதவி!

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் மனைவி வளர்செல்வி. அவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகளின் பெயர் கோகிலவாணி. மகனின் பெயர் ரஞ்சித். இருவரும் படித்து வருகின்றனர். எங்களுக்கு ஐந்து ஏக்கருக்கு மேல் மானாவாரிப் புஞ்சை நிலம் உள்ளது. ஒரு கிணறு உள்ளது. இலவச மின்சார இணைப்பைப் பெற்று இந்தக் கிணற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்து வந்தேன். மரவள்ளி, சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பெய்யாமல் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கிணற்றில் நீர் குறைந்து விட்டது. குறைந்த நீரை வைத்துச் சோளம், நிலக்கடலையைச் சாகுபடி செய்திருந்தேன். ஆனால் போதுமான அளவுக்குப் பாசனம் கொடுக்க முடியவில்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. விவசாயத்துக்காகச் செலவழித்த பணம் வீணாகி விட்டது.

இந்த நிலையில், என்ன செய்யப் போகிறோம் என்று கவலையுடன் இருந்தேன். குடும்பச் செலவுக்கும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்து வந்த நேரத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியுதவியை வழங்கும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்னும் செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி யடைந்தேன். அதிகாரிகள் எங்கள் நிலத்துக்கு வந்து காய்ந்து போன நிலக்கடலை, சோளப்பயிரைப் பற்றிக் கணக்கெடுத்துச் சென்றனர். அதன்மூலம் இப்போது எனக்கு 14,820 ரூபாய் வறட்சி நிவாரணமாகக் கிடைத்துள்ளது. சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்து போனதால் வறுமையில் வாடிய எங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். இது காலத்தில் கிடைத்த பேருதவியாகும். எங்கள் குடும்பத்தின் சார்பாக, முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்து, நாமக்கல் மாவட்டம், வேலக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த இரா.இராஜா (49) கூறியதாவது:

சமயத்தில் கிடைத்த பேருதவி!

“எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நானும் என் மனைவி பூங்கொடியும் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு இராஜேஸ், இரஞ்சித் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஸ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால், குடும்பச் செலவு, மகனின் படிப்புச் செலவுக்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆறு கறவை மாடுகளும் உள்ளன. நிலத்தில் கிணறு அமைத்து இலவச மின்சாரம் பெற்று அதன் மூலம் சோளம், மக்காச்சோளம் மற்றும் மாடுகளுக்கான தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்திருந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து சரியான மழை இல்லாத காரணத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டது. சாகுபடி செய்திருந்த சோளம், மக்காச்சோளம் மற்றும் தீவனப்பயிர்கள் அனைத்தும் வறட்சியால் காய்ந்து விட்டன. இதனால், வருமானம் ஏதுமின்றி மாடுகளை வளர்ப்பதற்கும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் தமிழக அரசு மாடுகளுக்கு மானிய விலையில் உலர் தீவனத்தை வழங்கியது. அதைப் பெற்று கால்நடைகளை வளர்த்து வருகின்றேன். வறட்சியால் காய்ந்த பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததன் அடிப்படையில், எனக்கும் ரூ.5,603 வறட்சி நிவாரண நிதியுதவி கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களைப் போன்ற ஏழை விவசாயிகளை வறட்சி நிவாரண நிதியுதவி வழங்கி வாழ்வில் ஒளியேற்றி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் எங்களது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அடுத்ததாக, நாமக்கல் வட்டம், ஏ.எஸ்.பேட்டைப் பகுதியைச் சேர்ந்த இரா.பெரியசாமி (61) தெரிவித்ததாவது:

சமயத்தில் கிடைத்த பேருதவி!

“நான் ஒரு விவசாயி. எனக்கு 1.83 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சொட்டுநீர்ப் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றேன். எனது நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு, பருத்தியைச் சாகுபடி செய்திருந்தேன். மழையின்றிக் கடும் வறட்சியால் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. இந்த நிலையில் இந்தச் செலவுகளை நான் எப்படிச் சரி செய்வது,  குடும்பத்தை எவ்வாறு நடத்துவது என்று வறுமையில் வாடிக் கொண்டிருந்த எனக்கு, வறட்சி நிவாரண நிதியுதவியாக ரூ.2964 கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. வறட்சியில் விவசாயத்தை இழந்து வறுமையிலுள்ள எனக்கு வறட்சி நிவாரண நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வாய்மொழிக்கேற்ப வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாத்திட, அவர்களின் துயரத்தைப் போக்கிட, வறட்சி நிவாரண நிதியுதவி வழங்கி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் வறட்சி நிவாரணம் பெற்றுப் பயனடைந்த விவசாயிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!