நாமக்கல் மாவட்டம் இலத்துவாடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையும், வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து, விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வளர்ப்போருக்கான கால்நடைத் தீவனம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் வறட்சி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாமை 24.03.2017 அன்று நடத்தின. இந்த முகாமுக்குத் தலைமையேற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி மு.ஆசியா மரியம் அவர்கள் பேசியதாவது:
“நாமக்கல் மாவட்டத்தில் ஏறக்குறைய 30 இலட்சம் கால்நடைகள் உள்ளன. அதிகமான பலன்களைத் தரக்கூடிய கால்நடை வளர்ப்பு இங்கே சிறப்பாக நடந்து வருகிறது. கால்நடைகள் நன்கு வளரவும், அதிகமான உற்பத்தியைக் கொடுக்கவும், சரியான தீவன முறையைக் கடைப்பிடித்தல் அவசியம். எனவே, இந்த வறட்சியான நிலையில், கால்நடைகளைக் காக்கும் வகையில், நமது மாவட்டத்தில் பத்து இடங்களில் உலர் தீவன மையங்களை அமைத்து, கிலோ இரண்டு ரூபாய் எனக் குறைந்த விலையில் உலர் தீவனத்தைத் தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால், என்னதான் உலர் தீவனங்களைக் கொடுத்தாலும் பாலுற்பத்தி அதிகமாக வேண்டுமானால், கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் கொடுக்கப்பட வேண்டும். எனவே, பசுந்தீவன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், கால்நடைகளை வளர்ப்போரே அவற்றைத் தயாரித்துக் கொள்ளும் வகையிலான எளிய தொழில் நுட்பங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இந்தத் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சியானது இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மண்ணில்லா தீவன உற்பத்தி முறையான ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் நவீன முறையில், ஒரு கிலோ விதைகளின் மூலம் சுமார் 7-8 கிலோ பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.
பல ஆண்டுகளுக்குப் பலனைத் தரக்கூடிய பணப்பயிர்களான தென்னை, மா போன்ற மரங்களை வறட்சிக் காலத்தில் குறைந்த நீரைக் கொண்டு பாதுகாப்பது குறித்த பயிற்சியும் இங்கே செயல்விளக்கமாகச் செய்து காட்டப்படுகிறது. விவசாயிகளும், கால்நடைகளை வளர்ப்போரும் இந்தப் பயிற்சிகள் மூலம் அளிக்கப்படும் தொழில் நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி, பல்லாண்டுப் பயிர்களையும், கால்நடைகளையும் பாதுகாத்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன உற்பத்தி
ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணில்லாமல் பயிரை வளர்க்கும் முறையாகும். இதற்குச் செங்குத்தான விவசாயம் என்று பெயர். ஆகவே, இதில் தட்டுகளை வைக்க ஏதுவாக ஆறடி உயரமுள்ள ஸ்டேண்டை அமைக்க வேண்டும். ஸ்டேண்ட் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்து நீளத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டேண்டில் ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்குமான இடைவெளி ஒரு அடி இருக்க வேண்டும். இதைத் தவிர, ஒரு அடி அகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குல உயரமுள்ள பிளாஸ்டிக் தட்டுகள், நீரைத் தெளிக்கும் ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முளைப்புக்கட்ட கோணிச்சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர்நிலையை அறிய தெர்மா மீட்டரும் தேவை.
மக்காச்சோளம், கோதுமை, பார்லி, ஓட்ஸ், சணப்பை, கொள்ளு, தட்டைப்பயறு போன்றவற்றை மண்ணில்லா தீவன முறையில் வளர்க்கலாம். இவற்றில் எளிதாகக் கிடைப்பது மக்காச்சோளம். புதிய, நன்கு காய்ந்த, பூசணம் பிடிக்காத, முளை உடையாத மக்காச்சோளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இளம் சோளப்பயிரில் நச்சுத்தன்மை இருக்கும் என்பதால் சோளத்தைத் தவிர்ப்பது நல்லது.

வளர்ப்பு அறை
சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடத்தில் பசுமைக் கூடத்தை அமைத்துக் கொள்ளலாம். சூரிய ஒளியைக் கடத்தக் கூடிய, புற ஊதாக்கதிரால் பாதிப்பை உண்டாக்காத கெட்டியான பாலித்தீன் பைகளால் கூடத்தைச் சுற்றி மூட வேண்டும். கூடத்துக்குள் இருக்கும் குளிர்ச்சியும் காற்றின் ஈரப்பதமும் வெளியேறக் கூடாது. தினமும் பலமுறை நீர் தெளிக்கப்படுவதால், அதனால் பாதிக்கப்படாத வகையில் ஸ்டேண்டை அமைத்துக் கொள்ள வேண்டும். கூடத்துக்குள் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் போட வேண்டும். பிளாஸ்டிக் தட்டுகளில் 3.5 மி.மீ. அளவில் 12 துளைகளை இட வேண்டும். அதிகப்படியான நீர் இந்தத் துளைகளின் வழியே வெளியேறும்.
வளர்ப்பு முறை
தட்டு ஒன்றுக்கு 300 கிராம் மக்காச்சோளம் போதுமானது. மக்காச்சோளத்தின் திரட்சி மற்றும் அளவைப் பொறுத்து இந்த அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். ஒரு நாளைக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ அதைப்போல எட்டு மடங்கு தட்டுகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு நாளைக்குப் பத்துத் தட்டுத் தீவனம் தேவையென்றால், 80 தட்டுகள் தேவைப்படும். பத்துத் தட்டுகளுக்குத் தேவையான மூன்று கிலோ மக்காச்சோளத்தை நன்கு மூழ்கும்படி பிளாஸ்டிக் வாளியில் 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, இந்த விதைகளைச் சாக்கில் கட்டி 24 மணிநேரம் வரையில் இருட்டில் வைக்க வேண்டும். பிறகு பார்த்தால் விதைகளில் சிறு முளைகள் இருக்கும்.
இந்த விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் விதைக்கு மேல் விதைகள் விழாத வகையில் இடைவெளி இல்லாமல் பரப்பிச் சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும். பிறகு தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டேண்டில் அடுக்கி நீர்த் தெளிப்பான் மூலம் நீரைப் புகையைப் போலத் தெளிக்க வேண்டும். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் இருக்க வேண்டும். மண்ணில்லா தீவனப் பயிருக்கு நீர் மிகவும் குறைவாகத் தான் தேவைப்படுகிறது. அடிக்கடி நீரைத் தெளிப்பது அவசியம்.
அறையின் வெப்பநிலை 24-25 டிகிரி வரையிலும், காற்றின் ஈரப்பதம் 80-85 விழுக்காடும் இருந்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். இந்த அளவுகளில் கொஞ்சம் குறைந்தோ கூடியோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்பநிலையைக் குறைக்க, தரையில் மணலைப் பரப்ப வேண்டும். இம்முறையில் 7 நாட்களில் 25 முதல் 30 செ.மீ. உயரத்துக்குப் பயிர்கள் வளரும்.
மண்ணில்லா தீவனத்தில் உள்ள சத்துகள்
இந்தத் தீவனத்தில் 13.6 சதம் புரதமும், குறைந்தளவு நார்ச்சத்தும் இருப்பதால், ஒரு கால்நடைக்கு 10-25 கிலோ வரையில் கொடுக்கலாம். மேலும், ஓர் ஆய்வின்படி, 7-8 கிலோ மண்ணில்லா பசுந்தீவனத்தைக் கொடுத்தால் ஒரு கிலோ அடர் தீவனத்தைக் குறைத்துக் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்கும் போது 15 சதவீதம் பாலுற்பத்தி அதிகமாகும். மேலும், கால்நடைகளை ஆய்வு செய்ததில், 10 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுத்தால் 1.70 கிலோ எடை கூடியதும் தெரிய வந்துள்ளது. பாலின் கொழுப்பு 0.3 சதமும், கொழுப்பில்லாத் திடப்பொருள்கள் 0.5 சதமும் கூடும்.
மண்ணில்லாத் தீவனப் பயிரில், இலை, வேர், விதைப்பகுதி என மூன்றையும் தீவனமாக அளிக்கலாம். மண்ணில் பயிரிட்டு 25-30 செ.மீ. உயரம் வளர்வதற்கு எவ்வளவு நீர் செலவாகிறதோ, அதில் 5 சத நீரை மட்டுமே கொண்டு, அதேயளவு தீவன மகசூலை இந்த முறையில் எடுக்க முடியும். மண்ணில்லாத் திவனத்தைத் தொடர்ந்து அளித்து வந்தால் பாலின் அளவு அதிகமாகும்.
பல்லாண்டுப் பயிர்களில் வறட்சி மேலாண்மை
பல்லாண்டுப் பயிர்களில் வறட்சி மேலாண்மை குறித்து, வேளாண்மை அறிவியல் நிலையத் தோட்டக்கலைத்துறை வல்லுநர் சி.சர்மிளா பாரதி எடுத்துரைத்தார். அப்போது மாமரங்களை வறட்சியில் இருந்து காப்பாற்ற, மண்பானை, பயனற்ற நீர்க்குடுவை, குளுக்கோஸ் புட்டிகள், குழாய் மூலம் பாசனம் கொடுக்கலாம் என்பதை விளக்கினார். பிறகு, அங்கே அமைக்கப்பட்டிருந்த அசோலா, ஹைட்ரோபோனிக்ஸ் செயல்விளக்கத் திடல்கள், தீவனப்பயிர் உற்பத்தி, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இயற்கைப் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய வல்லுநர்கள், தொடர்புடைய அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

