தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு விலையில்லாக் கறவைப் பசுக்களை வழங்குவதோடு, வறட்சிக் காலத்தில் அந்தக் கால்நடைகளை வளர்க்கத் தேவையான தீவனத்தைக் குறைந்த விலையில் வழங்கவும் ஆணையிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உலர் தீவன மையங்களை அமைத்து, 8.46 ரூபாய் மதிப்புள்ள உலர் தீவனமான வைக்கோலை 2.00 ரூபாய்க்கு மட்டுமே வழங்கிட ஆணையிட்டுள்ளது. பயனாளிகளுக்கு 6.46 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில், களங்காணி, எருமப்பட்டி, ஆண்டகழூர் கேட், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோர்ப்பாளையம், மாணிக்கம் பாளையம், ஆனங்கூர், காதப்பள்ளி ஆகிய பத்து இடங்களில், உலர் தீவனக் கிடங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஒரு கிடங்குக்கு 18.00 இலட்ச ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு, 250 டன் அளவுக்கு வைக்கோல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பத்து உலர் தீவனக் கிடங்குகளுக்கும் சேர்த்து 1.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வறட்சிக் காலத்தில் கால்நடைகளைக் காப்பதற்காக வழங்கப்படும் உலர் தீவனம் திட்டம், 8.3.2017 அன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. ஒரு கால்நடைக்கு தினமும் மூன்று கிலோ வீதம் அதிகபட்சம் ஐந்து கால்நடைகளுக்கு ஒரு வாரத்துக்கு 105 கிலோ தீவனம் மானிய விலையில் கொடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் கால்நடை வளர்ப்போர், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், தீவனக் கிடங்குக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகக் கால்நடை மருத்துவரை அணுகிப் பெயர்களைப் பதிவு செய்து உலர் தீவனத்தை வாங்கிக் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் திட்டத்தைத் தொடங்கிய ஒரு வாரத்தில் 59,060 கிலோ உலர் தீவனம் 4,99,648 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 695 பயனாளிகளுக்கு 1,18,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் இந்தப் பயனாளிகளுக்கு 3,81,528 ரூபாய் மானியமாகக் கிடைத்துள்ளது. பயனடைந்த கால்நடைகள் 3,475 ஆகும். பதிவு முன்னுரிமையின் அடிப்படையில் உலர் தீவனம் வழங்கப்படுகிறது.
இப்படி, மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி, மட்டப்பாறைப் புதூரைச் சேர்ந்த திரு. மு.அன்பழகன் (54) மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
“நான் ஏழை விவசாயி. எனக்கு நாலு ஏக்கர் புஞ்சை நிலம் இருக்கு. அதில் மழை பெய்தால் மானாவாரியா சோளம், கம்பு, மக்காச்சோளம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வோம். இதைக் கொண்டு அஞ்சு பசுமாடுகள், ரெண்டு எருமை மாடுகளை வளர்க்குறோம். இந்த மாடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துல தான் குடும்பத்தை நடத்திக்கிட்டு வர்றோம். ஆனால் கடந்த ரெண்டு வருசமா மழையே பெய்யாம போனதால கடுமையான வறட்சியா இருக்கு. அதனால மாடுகளுக்குத் தீவனம் கிடைக்காம ரொம்பச் சிக்கலான நிலையில, மாடுகளை இனிமே வளர்க்க முடியாதுன்னு சொல்லி வித்துடலாம்ன்னு இருந்தோம்.
இந்த நேரத்துல, கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் அறிவிச்சிருக்காங்க. ஒரு மாட்டுக்கு ஒருநாளைக்கு மூணு கிலோ தீவனம் குடுக்குறாங்க. ஒரு கிலோ தீவனத்தோட வெலை ரெண்டு ரூபாதான். அதிகபட்சமா அஞ்சு மாடுகளுக்குத் தீவனம் வாங்கிக்கிறலாம். இந்தத் திட்டத்துல நாங்க பதிவு செஞ்சு வைக்கோலை வாங்கி எங்க மாடுகளுக்குத் தீவனமா குடுக்குறோம். மாடுகள விற்கணும்ங்கிற எண்ணத்தை இந்தத் திட்டம் வந்ததுனால கைவிட்டோம். எங்க குடும்பத்தை வாழவைக்கும் வாயில்லா ஜீவன்களைக் காக்குறதுக்காக, உலர் தீவனம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் கோடான கோடி நன்றியை எங்க குடும்பத்தின் சார்புல தெரிவிச்சுக்கிறேன்’’ என்றார்.
அடுத்து, நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி, மட்டப்பாறைப் புதூர் பகுதியைச் சேர்ந்த திருமதி ம.பாரதி (48) பெருமிதத்துடன் கூறியதாவது:
“நாங்க கூலி வேலை செஞ்சு தான் குடும்பத்தை நடத்துறோம். எங்க வீட்டுக்காரர் பேரு மணி. எங்களுக்கு யோகஜோதின்னு ஒரு பொண்ணும் செந்தில்குமாருன்னு ஒரு பையனும் இருக்காங்க. மகளைக் கட்டிக் குடுத்துட்டோம். என்னால வேலை செய்ய முடியல. ஆனாலும் பொழப்பை ஓட்டணுமேன்னு ரெண்டு பால்மாடுகள வளர்க்குறேன். எங்கிட்ட ஒரு பசு மாடும், ஒரு எருமை மாடும் இதுகளோட கன்னுகளும் இருக்கு. மழை பெய்தா தீவனத்துக்குப் பஞ்சமிருக்காது. ஆனா இப்பத்தான் மழையே இல்லாம போச்சே? அதனால மாடுகளுக்குத் தீனி குடுக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்த மாடுகள எப்பிடி வளர்க்கப் போறோம்ன்னு வேதனைப் பட்டுக்கிட்டு இருந்தேன். இந்த நேரத்துல காதப்பள்ளி கால்நடை மருத்துவ மனையில மானிய விலையில ஒரு கிலோ வைக்கோல் ரெண்டு ரூபான்னு குடுக்குறாகன்னு கேள்விப்பட்டேன்.
உடனே, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகலை எடுத்துக்கிட்டுப் போயி கால்நடை மருத்துவரைப் பார்த்துப் பதிவு செஞ்சேன். அதனால எங்க மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்குது. இதனால நாங்க நிம்மதியா இருக்கோம். மாடுகளுக்கு எப்பிடித் தீவனம் குடுக்கப் போறோம்ன்னு கலங்கிக்கிட்டு இருந்த நேரத்துல வரப்பிரசாதமா, உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை அறிவிச்சு, குறஞ்ச விலையில தீவனத்தை வழங்கி வரும் தமிழக முதல்வருக்கு மனசார நன்றி சொல்லிக்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், காதப்பள்ளி ஊராட்சி, மட்டப்பாறைப் புதூரைச் சேர்ந்த திருமதி மு.லதா (43)மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:
எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நெலம் இருக்கு. இதுல மழைக்காலத்துல மானாவாரியா பயிர்களைச் சாகுபடி செய்வோம். இதுதான் எங்களுக்கு வருமானம். எங்களுக்கு ரெண்டு பசங்க. பொண்ணு பேரு ஜீவா. பையன் பேரு சரண். ரெண்டு பேரும் படிக்கிறாங்க. இந்த மானாவாரி விவசாயத்தோட கறவை மாடுகளையும் வளர்க்குறோம். ஆனா ரெண்டு வருசமா சரியா மழை பெய்யாததுனால, விவசாயம் செய்ய முடியல. பால்மாடுகள் மூலமா கிடைக்கிற வருமானத்தைக் கொண்டு, குடும்பச் செலவு, பிள்ளைக படிப்புச் செலவு, மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கிறோம். இப்போ கடுமையான வறட்சியா இருக்குறதுனால மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்க மாட்டேங்குது.
அதனால இந்த மாடுகளை எப்பிடி வளர்க்கப் போறோம்ன்னு கவலையா இருந்தோம். இந்த நேரத்துல, அம்மா முதலமைச்சரா இருந்தபோது கொண்டு வந்த, கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தச் சொல்லி உத்தரவு போட்டுருக்காங்கன்னு கேள்விப்பட்டோம். அதுவும் ஒரு கிலோ வைக்கோல் ரெண்டு ரூபாய்ன்னு சொல்லியிருக்காங்க. அதனால, உடனே கால்நடை மருத்துவ மனைக்குப் போயி பதிவு செஞ்சிட்டேன். இப்போ எங்க மாடுகளுக்குத் தேவையான தீவனம் கிடைக்குது. இந்தத் தீவனம் கிடைக்கலேன்னா எங்க மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்குறதைத் தவிர வேற வழியே இல்ல. ஆனா வாயில்லா ஜீவன்களைக் காக்குறதுக்காக உலர் தீவனத் திட்டத்தை முதலமைச்சர் அறிவிச்சதுனால நாங்க மாடுகளைத் தொடர்ந்து வளர்க்க முடியுது. அதனால இந்தத் திட்டத்தைக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எங்க குடும்பம் சார்பா கோடான கோடி நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
வேளாண்மை சார்ந்த கால்நடை வளர்ப்புக்கு முன்னுரிமை கொடுத்து, ஊர்களில் உள்ள ஏழ்மையிலும் ஏழ்மையான பெண்களுக்கு விலையில்லாமல் கறவைப் பசுக்களையும் வழங்கி வருகிறது தமிழக அரசு. அதுமட்டுமின்றி, வறட்சிக் காலத்தில் அந்தக் கால்நடைகளின் பசியாற்றும் விதமாக, மானிய விலையில் வைக்கோலையும் வழங்கி வருகிறது. மேலும், அவற்றுக்குத் தேவையான சிகிச்சைகளும் உடனுக்குடன் வழங்கப் படுகின்றன. இதனால், கால்நடைகளை வளர்ப்போர் பொருளாதார முன்னேற்றத்தை அடைகின்றனர்.
இப்படிக் கால்நடைத் துறையில் புதுமையான புரட்சியை உண்டாக்கி வரும் தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், இத்திட்டத்தால் பயனடைந்த மக்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

