My page - topic 1, topic 2, topic 3

ஒளியேற்றி வைத்த விபத்து நிவாரண நிதியுதவி!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகத் தமிழக அரசு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், விபத்துகளில் இறந்தவர்களின் குடும்ப வறுமையைப் போக்கும் விதமாக, முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவியை வழங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்துபோன 516 பேர்களின் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.3.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய செய்தித் தொகுப்பை இங்கே காணலாம்.

எதிர்பாராத விதமாக விபத்தில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவரின் குடும்பத் துயரைத் துடைக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியுதவி வழங்கப்படுகிறது. சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், இத்திட்டத்தின் கீழ் அவரின் குடும்பத்தாருக்கு ஒரு இலட்சம் ரூபாய்வழங்கப்படுகிறது. உறுப்பு இழப்பு ஏற்பட்டால் ஐம்பதாயிரம் ரூபாயும், கொடுங்காயங்கள் ஏற்பட்டால் 25 ஆயிரம் ரூபாயும்வழங்கப்படுகிறது. சிறிய அளவில் காயம் இருந்தால் பத்தாயிரம் ரூபாய்வழங்கப்படுகிறது.

விபத்துக் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும் காவல் நிலைய ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மூலம், நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவைச் சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டாட்சியருக்குஅனுப்புவார். வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் முன்மொழிவுகள் விபத்து நிவாரணப் பதிவேட்டில் வரிசையாகப் பதிவு செய்யப்படும். இதற்கான நிதி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குவழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ், 516 பேர்களின் குடும்பங்களுக்கு ரூ.3,90,05,000-00 விபத்து நிவாரண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் தனது கணவரை இழந்து விபத்து நிவாரண நிதியுதவியைப் பெற்ற நாமக்கல் கொள்ளப்பட்டறைத் தெருவைச் சேர்ந்த பாரதி தெரிவித்ததாவது:

ஒளியேற்றி வைத்த விபத்து நிவாரண நிதியுதவி!

“எனது கணவர் பெயர் சிவக்குமார். கட்டடத் தொழிலாளியாக இருந்து வந்தார். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து வந்தோம். எங்களுக்குச் சந்துரு என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு நாமக்கல் சேலம் சாலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு எனது இரண்டு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என்பது தெரியாமல் தவித்து வந்தேன்.

நாம் தான் படிக்காததால் கஷ்டப்படுகிறோம்; நம் பிள்ளைகளையாவது நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும்; இதற்கு என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணி வருந்தினேன். இந்த நிலையில் என் கணவர் விபத்தில் இறந்து போனதுக்கான நிவாரண உதவியாக ஒரு இலட்சம் ரூபாய் வந்துள்ளதாக, நாமக்கல் வருவாய்க்கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. இது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

எனது மாமியார், இரண்டு குழந்தைகள் மற்றும் எனக்கும் சேர்த்து ஒரு இலட்சம் ரூபாயை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்தப் பணம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும், குடும்பச் செலவுக்கும், எங்களது எதிர்காலத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணவனை இழந்து வறுமையில் வாடும் எங்களைப்போன்ற ஏழை எளியோருக்குப் பேருதவி செய்திடும் வகையில் விபத்து நிவாரண நிதியுதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதைப் போலவே எதிர்பாராத சாலை விபத்தில் தனது மகளை இழந்து விபத்து நிவாரண நிதியுதவியைப் பெற்ற நாமக்கல் வட்டம், ரெட்டிபட்டி கங்காநகரைச் சேர்ந்த மணிமேகலை தெரிவித்ததாவது:

ஒளியேற்றி வைத்த விபத்து நிவாரண நிதியுதவி!

“எனது கணவர் பெயர் சங்கரன். துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். எங்களுக்குத் தீனதயாளன், கௌசல்யா என இரண்டு பிள்ளைகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கௌசல்யா இரண்டு வருடத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கார் விபத்தில் இறந்து விட்டாள். மகள் இறந்தது எங்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. மகளுக்குத் திருமணம் ஆகவில்லை. கௌசல்யா படிப்பில் மிகவும் திறமைசாலி. படிக்கும்போதே கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, படிப்பு முடிந்ததும் பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து திறம்படச் செயல்பட்டாள்.

கௌசல்யா எல்லோரிடமும் இனிமையாகப்பழகுவாள். அவளை இழந்தது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், உறவினர்களுக்கும், அவளுடைய நண்பர்களுக்கும் பேரிழப்பு. எதிர்பாராத சாலை விபத்தில் இறந்த எனது மகளுக்கு முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் நிதியுதவியாகக்கிடைத்தது. அன்பான குடும்ப உறுப்பினர்களை விபத்தில் பறிகொடுத்து விட்டு வாடும் எங்களைப் போன்றவர்களுக்குஉதவும் வகையில், விபத்து நிவாரண நிதியுதவிவழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

எதிர்பாராத விதமாகச் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விபத்து நிவாரண நிதியுதவியை வழங்கி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், நாமக்கல் மாவட்டப் பயனாளிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!