My page - topic 1, topic 2, topic 3

நாமக்கல் மாவட்ட விவசாய வளர்ச்சிப் பணிகள்!

நாமக்கல் மாவட்ட விவசாய வளர்ச்சிப் பணிகள்!

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.10.2017 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் அவர்கள் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை 716.54 மி.மீ. நடப்பு மாதம் முடிய பெய்த சராசரி மழை 557.28 மி.மீ. இதுவரை பெய்த மழை 580.88 மி.மீ. சராசரி மழையைவிட 23.60 மி.மீ. கூடுதலாகப் பெய்துள்ளது. நடப்பாண்டில், நெல் 123 எக்டர், பயறு வகைகள் 9,166 எக்டர், சிறுதானியங்கள் 55,944 எக்டர், எண்ணெய் வித்துகள் 23,821 எக்டர், பருத்தி 1,778 எக்டர், கரும்பு 5,466 எக்டர் எனச் சாகுபடியிலுள்ளமொத்தப் பரப்பு 96,298 எக்டர். தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு 17,999 எக்டர்.

பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை நடப்பாண்டில் 1975 எக்டரில் செயல்படுத்த, ரூ.1087.60 இலட்சம் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. இதில், இதுவரை 2094 விவசாயிகளின் 1484 எக்டர் நிலத்தில் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

நமது மாவட்டத்தில் 2017-18 காரீப் பருவத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், கடன்பெற்ற விவசாயிகள் 73 பேரும், கடன் பெறா விவசாயிகள் 15,140 பேரும் இணைந்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு 29,014 ஏக்கர். விவசாயிகள் செலுத்திய பிரிமியம் ரூ.88,81,151. தோட்டக்கலைப் பயிர்களில் கடன் பெற்ற விவசாயிகள் 370 பேரும், கடன் பெறா விவசாயிகள் 58 பேரும் காப்பீடு செய்துள்ளனர். பயிர்க் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு 634 ஏக்கர்.விவசாயிகள் செலுத்திய பிரிமியம் ரூ.15,53,913.

கடந்தாண்டு ரபி பருவத்தில் இந்தத் திட்டத்தில் 21,516 விவசாயிகள், பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். இதில், நெல் சாகுபடிக்கு இயலாமை இனத்தில் பிரிமியம் செலுத்திய 326 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.41,49,332 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், நெல் சாகுபடியில் மகசூலை இழந்த 366 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.52,29,228 வழங்கப்பட்டுள்ளது. நெல்லைத் தவிர, இதர பயிர்களுக்குப் பதிவு செய்துள்ள 20,824 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுப் பண்ணையம்

தமிழகத்தில் சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்திக் குழுக்களைத் தொடங்கி, கூட்டுப் பண்ணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 100 விவசாயிகளைக் கொண்ட 2,000 உழவர் உற்பத்திக் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.

நமது மாவட்டத்தில் வேளாண் துறையின் மூலம் 160 உழவர் ஆர்வலர் குழுக்களும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 120 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒத்த பயிர் சாகுபடியில் ஈடுபடும் ஐந்தைந்து குழுக்களை இணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படும்.

இப்படி, வேளாண்மைத் துறை மூலம் 32 குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 24 குழுக்களும் அமைக்கப்படும். ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் ரூ.5 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்படும். இதன்மூலம், கலப்புப் பண்ணையம் மற்றும் மதிப்புக் கூட்டிய வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகள் தொழில் முனைவோராகச் செயல்பட வழிவகை செய்யப்படும்.

நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம்

தமிழ்நாட்டில் மானாவாரிப் பயிர்களின் உற்பத்தித் திறனையும், வேளாண் பயிர்களின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2016-17 முதல் 2019-20 வரை செயல்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய வட்டாரங்களில் தலா 2 தொகுப்புகளில், ஒரு தொகுப்பிற்கு 1,000 எக்டர் வீதம் மொத்தம் 10,000 எக்டரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயறுவகைப் பயிர்கள் 1,150 எக்டர், சோளம் 4,710 எக்டர், நிலக்கடலை 4,140 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

மானாவாரி நிலங்களில் கோடையுழவு செய்ய எக்டருக்கு ரூ.1,250 வீதம் மான்யம் வழங்கப்படுகிறது. சாகுபடி செய்ய 50% மான்யத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட அனைத்துத் தொகுப்புகளிலும் முன்நுழைவுப் பணியாக, தடுப்பணைகள், கிராமக் குட்டைகள் ரூ.5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தொகுப்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலும், தொகுப்பில் உள்ள ஒரு விவசாயிகள் குழுவிற்கு ரூ.6 இலட்சம் மதிப்பிலும், பருப்பு உடைக்கும் கருவி அல்லது எண்ணெய்ப் பிழிவுக் கருவி அல்லது சிறுதானியங்களைப் பதப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் ஒவ்வொரு தொகுப்பிலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு விவசாயக் குழுவிற்கு ரூ.8 இலட்சம் மான்யத்தில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட தொகுப்புகளில் 1,300கால்நடைகளுக்குத் தாதுப்புக் கலவை வழங்குதல், செயற்கைக் கருவூட்டல் முகாம் நடத்துதல் மற்றும் மடிநோயிலிருந்து கால்நடைகளைக் காக்கும் நடவடிக்கைக்காக என, தலா ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான பணிகள், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்ட விவசாய வளர்ச்சிப் பணிகள்!

தோட்டக்கலைத்துறை: தேசியவேளாண்மை வளர்ச்சித் திட்டம்

நடப்பாண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம், பழச்செடிகள், காய்கறி விதைகள், நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. நிழல்வலைக் கூடம் மற்றும் குறைந்த விலை வெங்காயச் சேமிப்புக் கிடங்கை அமைக்கும் பயனாளிகளுக்குப் பணி உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்தப் பொருள் இலக்கு 1,458 எக்டர். நிதி இலக்கு ரூ.214.09 இலட்சம். மேலும், இத்திட்டத்தின் கீழ் 40 சதமான்யத்தில் வீட்டுமாடிக் காய்கறித் தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன.

மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் தோட்டக்கலைப் பயிரில் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, சாகுபடிக்கான 50% பின்னேற்பு மான்யத்தை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 250 எக்டர் பொருள் இலக்காகவும், நிதி இலக்காக ரூ.69.90 இலட்சமும் பெறப்பட்டு உள்ளன. தற்சமயம் கொல்லிமலை வட்டாரத்தில் 60 எக்டருக்கான நடவுச் செடிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரிகிரிஷி சின்சாயி யோஜனா

குறைந்த நீரில் அதிக மகசூல் என்னும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ், 3,050 எக்டரில் ரூ.2,110 இலட்சத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

அரசு தோட்டக்கலைப் பண்ணை

கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு மற்றும் படசோலையில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் விவசாயிகளுக்குத் தேவையான நடவுச்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. செம்மேடு பண்ணையில் 5.031 இலட்சம் செடிகளும், படசோலைப் பண்ணையில் 6.329 இலட்சம் செடிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

நாமக்கல், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய 6 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. இங்கே, விவசாயிகள் 6 மாதம் வரையில் இருப்பு வைக்கும் பொருள்களுக்குக் கடனாக ரூ.3 இலட்சம் வரையில் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 5 சதமாகும்.வியாபாரிகள் 3 மாதம் வரை இருப்பு வைக்கும் பொருள்களுக்குக் கடனாக ரூ.2 இலட்சம் வரையில் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 9 சதமாகும்.

உழவர் சந்தைகள்

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம்,  திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 6 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் 388 கடைகள் செயல்படுகின்றன. நாள்தோறும் 452 விவசாயிகள், ரூ.18.50 இலட்சம் மதிப்புள்ள 58 டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்கின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பம் அளித்து அடையாள அட்டைகளைப் பெற்றுப் பயனடையலாம்.

வேளாண்மைப் பொறியியல் துறை

வேளாண்மைப் பொறியியல் துறையில் இயந்திரமயமாக்கலின் துணை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,நமது விவசாயிகளுக்கு, டிராக்டர், ரோட்டாவேட்டர், கலப்பைகள், களையெடுக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி, தெளிப்பான்கள் மான்யத்தில் வழங்கப்படுகின்றன. நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கத் திட்டத்தின் கீழ், தற்போது 5 பெரிய தடுப்பணைகள், 6 நடுத்தரத் தடுப்பணைகள் ரூ.40 இலட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இன்னும் 2 கிராமக் குட்டைகள் ரூ.10 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இத்திட்டத்தின் கீழ், கோடையுழவு 10 தொகுப்புகளில் 10,000 எக்டரில் நடந்துள்ளது. இதற்கான நிதியாகப் பெறப்பட்ட ரூ.92.30 இலட்சம், ஒரு எக்டருக்கு ரூ.1250 வீதம் விவசாயிகளுக்கு மான்யமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


இரா.சுப்பிரமணியம்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

  • மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்!

  • பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் உதவி!