My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விவசாயிகளை ஆதரிக்கும் வேளாண் பொறியியல் துறை!

விவசாயிகளை ஆதரிக்கும் வேளாண் பொறியியல் துறை! Heading Pic https://pachaiboomi.net/567483-2/

மிழ்நாடு அரசு நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையில் மாபெரும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், உழவு இயந்திரம், பவர் டில்லர், நெல் அறுவடை இயந்திரம், இயந்திரங்கள் வாடகை மையம், சோலார் பம்ப்செட் திட்டம், டீசல் பம்ப்செட் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள் திட்டம், மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைத் திட்டம், பிரதம மந்திரி நீர்ப்பாசனத் தடுப்பணைத் திட்டம், விவசாயிகளுக்கான பயிற்சிகள், செயல் விளக்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பயிற்சிக் கூடங்கள், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ், நீர் சேமிப்புக்கான தடுப்பணைத் திட்டம் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 556 விவசாயிகளுக்கு ரூ.533.09 இலட்சம் மதிப்பில் உழவு இயந்திரங்கள், 141 விவசாயிகளுக்கு ரூ.96.23 இலட்சம் மதிப்பில்    பவர் டில்லர்கள், வாடகை மையம் திட்டத்துக்காக ரூ.320.00 இலட்சம் மதிப்பில் 32 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், 3,259 விவசாயிகளுக்கு ரூ.553.16 இலட்சம் மதிப்பில் பல்வேறு வேளாண் இயந்திரங்கள், 6 விவசாயிகளுக்கு ரூ.18.89 இலட்சம் மதிப்பில் சோலார் டிரையர், 114 விவசாயிகளுக்கு ரூ.406.98 இலட்சம் மதிப்பில் சோலார் பம்ப்கள், 15 விவசாயிகளுக்கு ரூ.9.08 இலட்சம் மதிப்பில் டீசல் பம்ப்கள் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள், 2 இடத்தில் ரூ.270.00 இலட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம்,

22 விவசாயிகளுக்கு ரூ.88.00 இலட்சம் மதிப்பில் நெல் அறுவடை இயந்திரங்கள், 58 இடங்களில் நிலத்தடி நீர்ச் சேமிப்புக்காக ரூ.32.15 இலட்சம் மதிப்பில் கம்பிவலைத் தடுப்பணைகள், ரூ.41.35 இலட்சம் மதிப்பில் சரிவைத் தாங்கும் சுவர்கள், 4 இடங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பில் பாசனத் தடுப்பணைகள், 2 இடங்களில் ரூ.10.85 இலட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணைகள், மாநிலத் தோட்டக்கலைப் பண்ணையில் ரூ.29.00 இலட்சம் மதிப்பில் தரம் உயர்த்தும் 2 பணிகள், 6 இடங்களில் ரூ.17.54 இலட்சம் மதிப்பில் செயற்கை முறையில் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ரூ.2.87 இலட்சம் மதிப்பில் 28 பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள், 5 விவசாயிகளுக்கு ரூ.0.78 இலட்சம் மதிப்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டப் பயன்கள்,

13 இடங்களில் நிலத்தடி நீர்ச் சேமிப்புக்காக ரூ.43.97 இலட்சம் மதிப்பில் பிரதம மந்திரி நீர்ப்பாசனத் தடுப்பணைகள், 2 இடங்களில் ரூ.0.80 இலட்சம் மதிப்பில் வெங்காயச் சேமிப்புக் கிடங்குகள், 22 இடங்களில் ரூ.80.56 இலட்சம் மதிப்பில் மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைத் திட்டம், ஒரு இடத்தில் ரூ.60.94 இலட்சம் மதிப்பில் மாவட்டத் தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பயிற்சிக் கட்டடம், 6 இடங்களில் ரூ.45.10 இலட்சம் மதிப்பில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் சார்பில் தடுப்பணைகள் என, நாமக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.26.90 கோடி மதிப்பிலான 4,296 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

விவசாயிகளை ஆதரிக்கும் வேளாண் பொறியியல் துறை! K.Chinnasamy 2 https://pachaiboomi.net/567483-2/

இவ்வகையில், சோலார் பம்ப் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாரை அமைத்து விவசாயம் செய்து வரும் மோகனூர் வட்டாரம், ஆரியூர், சிங்கக்கவுண்டன் புதூர் விவசாயி க.சின்னசாமி தெரிவித்ததாவது:

“எனக்கு 7 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். முன்பு கிணற்று நீரை ஏற்றம் கொண்டு இறைத்து விவசாயம் செய்து வந்தோம். அதன் பிறகு டீசல் பம்ப்செட்டைப் பயன்படுத்தி வந்தோம். இதில் செலவு அதிகமானதால், முழுமையாக விவசாயம் செய்ய முடியவில்லை. மேலும், நீர் குறைவாக இருந்தாலும் விவசாயம் செய்ய முடியாது. மானாவாரி சாகுபடி மட்டுமே செய்ய முடியும். இப்படி, பல ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்துள்ளது. இதனால், ஆழ்குழாய்க் கிணற்றை அமைத்து டீசல் பம்ப்செட்டைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தேன். இதனால் செலவு அதிகமானது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்த, மானிய உதவியுடன் சோலார் பம்ப்செட் திட்டம் நடைமுறையில் இருப்பதாக அறிந்தேன். உடனே சோலார் பம்ப்செட் வேண்டி விண்ணப்பம் செய்ததால், எனக்கு சோலார் பம்ப்செட் மானிய விலையில் கிடைத்தது. அதற்கு எனது பங்களிப்புத் தொகையாக 20%, அதாவது, 1,31,205 ரூபாயைச் செலுத்தினேன். அரசாங்கம் 80% மானியமாக 4,12,295 ரூபாயை வழங்கியது. இதன்மூலம், ரூ.5,43,500 மதிப்பில் 3 சோலார் பேனல்களை அமைத்து, ஏழரைக் குதிரைத் திறன் கொண்ட மோட்டாரைப் பொருத்தி, எவ்விதச் சிரமும் இல்லாமல் நீரை இறைத்து விவசாயம் செய்து வருகிறேன். தற்போது நெல், காய்கறிகள், மரவள்ளி, எள் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளேன்.

மேலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை, மா மரங்களை வளர்த்து வருகிறேன். இப்போது விவசாயத்தில் நல்ல இலாபம் கிடைத்து வருகிறது. என்னைப் போன்ற ஏழை விவசாயிகள் சுமார் ரூ.5.43 இலட்சம் மதிப்புள்ள சோலார் பம்ப்செட்டை அமைப்பது முடியாத காரியம். அதனால் எங்களது சிரமங்களைக் கவனத்தில் கொண்டு, 80% மானியத்தில் சோலார் பம்ப்செட்டை அமைத்துக் கொடுத்து வேளாண் உற்பத்தி பெருகிடவும், எங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் காரணமான, முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அடுத்து, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் திட்டத்தின் மூலம், வேளாண் கருவிகளைப் பெற்று பயனடைந்து வரும், மோகனூர் வட்டாரம், பரளி, கங்காணிப்பட்டி விவசாயி ர.செந்தில்குமார் தெரிவித்ததாவது:

“எனது தந்தை ரங்கம நாயக்கர், தாயார் பொம்மாயி. இரத்தினவேல், தேவராஜ் என்று மூத்த சகோதரர்கள் உள்ளனர். எங்கள் குடும்பம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து விவசாயத்தைச் செய்து வந்தேன். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் விவசாயம் சார்ந்த தொழில் ஒன்றைச் செய்யலாம் என்று இருந்தேன். அப்பொழுது வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மானிய உதவியுடன் வேளாண் இயந்திரங்களும் வேளாண் கருவிகளும் வழங்கப்படுவதாக அறிந்தேன்.

விவசாயிகளை ஆதரிக்கும் வேளாண் பொறியியல் துறை! R.Senthilkumar.2 https://pachaiboomi.net/567483-2/

எனக்கு விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால், இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என்று விண்ணப்பித்தேன். இதனால், ஹெச்.டி.எப்.சி வங்கியில் வேளாண் கருவிகளை வாங்குவதற்காக 10.00 இலட்சம் ரூபாயைக் கடனுதவியாகப் பெற்றேன். அத்துடன், எனது பங்களிப்புத் தொகையாக ரூ.8.55 இலட்சத்தைச் செலுத்தினேன். ஆக மொத்தம் ரூ.18.55 இலட்சத்துடன் அரசு மானியம் ரூ.10.00 இலட்சத்தையும் சேர்த்து, ரூ.28.55 இலட்சம் மதிப்பில், ஒரு மகேந்திரா டிராக்டர், ஒரு ரொட்டோவேட்டர் கருவி, உழவு இயந்திரம், தீவனத்தைக் கட்டும் இயந்திரம், ஒரு மினி பவர்டில்லர் உள்ளிட்ட 17 வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகள் கிடைத்தன.

இவற்றைக் கொண்டு எங்கள் நிலத்தில் மிக எளிமையாக விவசாயம் செய்து வருகிறோம். மேலும், எங்கள் பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகளைக் கொண்டு உழவு உள்ளிட்ட வேளாண் பணிகளைச் செய்து கொடுக்கிறேன். இதனால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. தற்போது 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, சோளம், கம்பு, மக்காசோளம், மரவள்ளி, நெல், காய்கறிகள் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்துள்ளேன். இப்பொழுது எங்கள் குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், ரூ.10.00 இலட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கியதால், நாங்களும் நன்றாக இருக்கிறோம்; எங்களைப் போன்ற ஏழை விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் வேளாண்மைப் பணிகளைச் செய்து கொடுக்கிறோம். இப்படி, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கும், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் எங்களது எங்கள் ஆயுள் உள்ளவரை நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்து வரும் நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


மு.அண்ணாதுரை,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!