விவசாயிகள், தங்களின் தொழிலில் இலாபமில்லை என்பதும், சாகுபடியைக் குறைவாகச் செய்தால் இழப்பைக் குறைக்கலாம் என்பதும், அதிகமாகச் செலவழிக்காமல் இருந்தால் நஷ்டமே வராது என்பதும், பொய்யான கற்பனையாகும். விவசாயத்தை, இலாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் தொழிலாக நினைப்பதில் தவறில்லை. அப்படிப் பார்த்தால், நிரந்தர வைப்புத் தொகைக்கு வட்டி வருவதைப் போலத்தான், சாகுபடி மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பொருள், பணம் போன்றவை.
பல தலைமுறைகளாகப் பேணிக் காக்கப்பட்ட மதிப்புமிகு நிலம், இப்போது உங்களிடம் உள்ளது. எனவே, நீங்கள் உங்கள் நிலத்தின் தற்காலிக உரிமையாளரே. ஆண்டுதோறும் நிலத்தின் மதிப்புக் கூடினாலும், எல்லோரும் நிலத்தை விற்று வேறு தொழில் செய்வதில்லை.
அடை அடையாகத் தேனீக்களை வளர்ப்பது முதல், கொத்துக் கொத்தாகக் காய்கனிகள் உற்பத்தி வரை, வாய்ப்புகள் பல உள்ளன. மண்ணுக்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்து, சிறந்த உத்திகளைக் கையாள்வது மட்டுமே அதிக வரவுக்கு வழிகோலும். உங்களது நிலம் நீடித்த வரவைத் தரும் அற்புத வங்கியாகும். அதன் ஒவ்வொரு சதுர சென்டி மீட்டருக்கும் உரிய முதலீட்டைச் செய்ய வேண்டும்.
காசுக்குத் தக்கபடி தான் பணியாரம் என்பதைப் போல, உரிய முதலீடுகளைச் செய்தால் தான், எந்தத் தொழிலிலும் வரவை எதிர்பார்க்க முடியும். விவசாயம் ஒரு தொழில் தான். அதற்கு, மூலதனமும், உடல் உழைப்பும் மட்டுமல்ல, தக்க நிதியும் தேவை.
உங்கள் தாத்தாவும் பாட்டியும் விவசாயத்தில் கவனமாக ஈடுபட்டதைப் போல, அவர்கள் மண்ணைக் காத்ததைப் போல, நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்கள் மகனுக்கோ மகளுக்கோ, விவசாயம் மீதான ஆர்வமும், பற்றும் ஈடுபாடும் வருவதற்கு முயற்சி செய்தீர்களா?
பணம் பணமென்று வரவை மட்டுமே பார்ப்பதை விட்டு விட்டு, முதலீடு செய்து, நீண்டகால வரவுக்கான பயிர்த் திட்டத்தைத் தயாரியுங்கள். ஒரு காசைப் பேணினால் இருகாசு தேறும் என்பதை நினைவில் வையுங்கள்.
நாம் பாரம்பரியத் தொழிலாகச் செய்து வந்த விவசாயத்தை, பல்லடுக்குப் பயிர்கள், இணைத் தொழில்கள் என்று, சிறப்பாகச் செய்வதற்கான எண்ணற்ற வழிமுறைகள் இன்று இருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.
இப்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள், அந்தக் காலத்தில் உங்கள் முன்னோருக்குக் கிடைத்திருந்தால், உங்கள் முன்னேற்றம் பல மடங்கு பெருகியிருக்கும். அதற்குக் காரணம், உழைப்பை நம்பிய அவர்கள், பலன்களைப் பற்றிக் கணக்குப் பார்க்காமல் கடினமாக உழைத்தது தான்.
உங்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகிட, பலவித மர வகைகள் வளர்ப்பு மற்றும் இணைத் தொழில்களைச் செய்திட முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, ஒரு மாடு வளர்ப்பவர் இன்னொரு மாடு வளர்ப்பது கடினமான செயலல்ல. பத்துக் கன்றுகளை வளர்ப்பவர், இன்னும் சில கன்றுகளைக் கூடுதலாக வளர்க்க முடியும். சிரமம் பார்க்காமல் உழைப்பது தான் நம்மை வாழ வைக்கும்.
நல்ல தொழில் என, ஒன்றைப் பற்றிப் படித்தாலோ, கேள்விப்பட்டாலோ, அதைக் கையாள முயலாமல், அதெல்லாம் என்னால் முடியாது, அதையெல்லாம் யார் செய்வது என்று, தட்டிக் கழிப்பது அறியாமையாகும். உங்கள் கண் முன்னே கடந்தாண்டு 60 ஆடுகளை வளர்த்தவர், இந்தாண்டு 120 ஆடுகள், அடுத்த ஆண்டு 300 ஆடுகள் என்று வளர்த்து முன்னேறி வரும் போது, நீங்கள் மட்டும் சலிப்பாகப் பேசுவீர்கள் என்றால், நீங்கள் முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. சரியாகத் திட்டமிட்டு, இரண்டு இணைத் தொழில்களைத் தொடங்குங்கள்.

டாக்டர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

